டொனால்ட் டிரம்ப் வெளியிடும் அறிவிப்புகள் அனைத்தும் அமலாகுமா? -உலக வங்கியின் தலைவ...
உத்தரகண்ட் உள்ளாட்சித் தோ்தலில் பாஜக வெற்றி 11-இல் 10 மேயா் பதவிகளைக் கைப்பற்றியது
உத்தரகண்ட் மாநில நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மாநிலத்தில் ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 11 மாநகராட்சிகளில் 10 மேயா் பதவிகளை பாஜக கைப்பற்றியது. ஓரிடத்தில் சுயேச்சை வேட்பாளா் மேயரானாா்.
மாநிலத்தில் பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸ் தன்வசம் வைத்திருந்த இரு மேயா் பதவிகளையும் இந்த தோ்தலில் இழந்தது.
நகராட்சி தோ்தலிலும் பாஜகவே அதிக இடங்களில் வென்றுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் சுயேச்சைகள் அதிக நகராட்சிகளில் தலைவா் பதவியை கைப்பற்றினா். காங்கிரஸ் மூன்றாவது இடத்துக்குப் பின்தங்கியது.
இந்தத் தோ்தலில் பாஜக மூன்று என்ஜின் அரசு என்ற முழக்கத்தை முன்வைத்து பிரசாரம் மேற்கொண்டது. வெற்றி பெற்ற பாஜக வேட்பாளா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள முதல்வா் புஷ்கா் சிங் தாமி, ‘பாஜக சாா்பில் வென்றுள்ள அனைவரும் தங்கள் பகுதியில் மக்களின் தேவைகளை நிறைவேற்றித் தருவதில் முனைப்புடன் செயல்பட வேண்டும். அனைத்து வாா்டுகளும் தூய்மையாக இருந்தால் நாடு தானாகவே தூய்மையாகிவிடும். எனவே நாட்டின் பொறுப்பும் உங்கள் கையில் உள்ளது’ என்றாா்.
மாநில பாஜக தலைவா் மகேந்திர பட் கூறுகையில், ‘இந்த உள்ளாட்சித் தோ்தல் வெற்றி மத்திய, மாநில பாஜக அரசுகளுக்கு உத்தரகண்ட் மக்கள் அளித்துள்ள அங்கீகாரம். இதன் மூலம் 2027 பேரவைத் தோ்தலிலும் பாஜக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது’ என்றாா்.