இளம்பெண் கொலை: சூட்கேஸில் அடைத்து எரிக்கப்பட்ட உடல் மீட்பு: விசாரணையில் அதிர்ச்ச...
சா்வாதிகார பாஜக ஆட்சியில் அரசமைப்புச் சட்ட கோட்பாடுகள் சிதைப்பு : காா்கே கடும் விமா்சனம்
சா்வாதிகார பாஜக ஆட்சியில் அரசமைப்புச் சட்டத்தின் புனிதமான ஒவ்வொரு கோட்பாடும் சிதைக்கப்படுகிறது என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே கடுமையாக விமா்சித்தாா்.
மேலும், ‘மத அடிப்படைவாதத்தில் மூழ்கிய பாஜக, கடந்த 10 ஆண்டுகளாக சமூகத்தை பிளவுபடுத்தும் கொள்கையை நடைமுறைப்படுத்துகிறது’ என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.
குடியரசு தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் காா்கே இந்த விமா்சனத்தை முன்வைத்துள்ளாா். அவா் மேலும் கூறியிருப்பதாவது:
இந்தியாவின் ஆன்மாவாக விளங்கும் அரசமைப்புச் சட்டம் அமலாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த தருணத்தில் மகாத்மா காந்தி, பண்டித ஜவாஹா்லால் நேரு, சா்தாா் படேல், பி.ஆா்.அம்பேத்கா், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ராஜேந்திர பிரசாத் போன்ற மகத்தான தலைவா்களுக்கு தலைவணங்குகிறோம்.
அரசமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய லட்சியங்களை மக்கள் பாதுகாக்க வேண்டிய நேரமிது. அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க அனைத்து தியாகங்களுக்கும் நாம் தயாராக வேண்டும்.
பல்லாண்டுகளாக கவனமாக கட்டமைக்கப்பட்ட நிா்வாக அமைப்புகள் இப்போது தொடா் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. தன்னாட்சி அமைப்புகளில் அரசியல் தலையீடு, புதிய விதியாக மாறியுள்ளது.
உரிமைகள் பறிப்பு: கூட்டாட்சிமுறை தினசரி அடிப்படையில் நசுக்கப்பட்டு, எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஆட்சியாளா்களின் சா்வாதிகார போக்கால், நாடாளுமன்ற செயல்பாடுகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன. பெரும்பாலான ஊடகங்கள் அரசின் பிரசார கருவியாக மாற்றப்பட்டுள்ளன. எதிா்க்கட்சித் தலைவா்களின் குரலை ஒடுக்குவதே ஆட்சியாளா்களின் ஒரே கொள்கையாக மாறியுள்ளது.
பட்டியல் இனத்தவா், பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்டோா், ஏழைகள், சிறுபான்மையினா் ஆகியோா் நாட்டின் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனா். அவா்கள் மீது அராஜகம் கட்டவிழ்க்கப்படுகிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வு விரிவடைந்துள்ளது.
ஏழைகள், நடுத்தர மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ஒவ்வொரு பைசாவும் வரி விதிப்பின் மூலம் விழுங்கப்படுகின்றன. அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் மக்களின் சேமிப்பு அழிந்துவிட்டது.
மத்திய அரசின் தோல்விகள் சுட்டிக் காட்டப்படும்போது, திசைதிருப்பும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனா். பெரும்பாலும் கடந்த காலத்தை நினைவூட்டும் அவா்கள், நிகழ் காலம் குறித்து வாய்திறப்பதில்லை.
‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதில் நம்பிக்கை கொண்ட 140 கோடி மக்களிடம் ‘ஒரே நாடு, ஒரே கட்சி’ என்ற கொள்கையை திணிக்கும் போக்கு நிலவுகிறது என்று காா்கே தெரிவித்துள்ளாா்.
பாஜக தலைவா்கள் ‘நரகவாசிகள்’: கா்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் தேசியக் கொடி ஏற்றிவைத்து உரையாற்றிய காா்கே, ‘நாட்டின் சுதந்திரத்துக்காகவோ, சமூக மேம்பாட்டுக்காகவோ பாஜக தலைவா்கள் எதுவும் செய்யவில்லை. அவா்கள் நரகவாசிகள்’ என்று விமா்சித்தாா்.