இந்தியா்களுக்காக உருவானது தேசிய கல்விக் கொள்கை: ஆளுநா் ஆரிஃப் முகமது கான்
புத்தகக் கடையைப் பூட்ட கட்ட(ட)ம் கட்டிய வெள்ளை அரசு - ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை பகுதி -19
அமெரிக்காவின் கறுப்பர்கள் மத்தியில் அறியப்பட்ட குடியுரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங்.
1964-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிங்குக்கு வழங்கப்பட்ட பின் சர்வதேச அளவிலான செயற்பாட்டாளர்களால் அறியப்பட்ட மனித உரிமை ஆர்வலரானார். 1968-ம் ஆண்டு ஏப்ரல் நான்காம் தேதி அவர் சுட்டுக் கொல்லப்பட்ட பின், உலகம் முழுவதுமுள்ள மக்களால் அறியப்பட்ட தலைவரானார். மார்ட்டின் லூதர் கிங் கொல்லப்பட்ட பின்பு அவரைப் பற்றிய அபிப்ராயம் லூயிஸ் மிஷாவ்விடம் மாறி இருக்கிறதா என்பதை அறிய ஆர்வமானேன்.
“நான் எப்போதுமே கிங்கின் கருத்துக்களோடு உடன்பாடு கொண்டது கிடையாது. இருந்தாலும் கறுப்பர்களுக்கான உரிமைகளை மீட்கும் போரில் அவரும் ஒரு படை வீரனாகத் தனது பங்களிப்பை சிறப்பாக நிறைவேற்றி இருக்கிறார். “கறுப்பின சமூகத்தில் வெளிப்படையாகப் பேசுபவர்களை ஒழித்துவிட்டால், அந்தச் சமூகம் தோற்று துவண்டுவிடுமென சிலர் நினைக்கிறார்கள்.அப்படியல்ல, அந்தச் சிலர் தவறிழைக்கிறார்கள். கறுப்பின சமூகம் தங்களுக்காக உரத்து முழங்கும் குரல்களைக் கண்டுபிடிக்கும். அதன் மூலம் தங்கள் ஆயுதங்களைக் கூர்தீட்டி, போர்க்களத்தில் இணைந்துகொள்ளும். நான் வன்முறையாளன் கிடையாது. வார்த்தைகளைக் கொண்ட போர்க்களத்தில்தான் நான் சண்டையிட்டு வருகிறேன். ஆனால், கறுப்பர்கள் ஏன் கோபம் கொப்பளிக்கக் கொந்தளிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்கிறேன்.
“வன்முறையின் தோற்றுவாய் சொர்க்கம்தான். கடவுள்தான் முதன்முறையாக வன்முறையைப் பயன்படுத்தினார். சாத்தானை சொர்க்கத்திலிருந்து நரகத்திற்குத் தூக்கி வீசியதுதான் வன்முறையின் பிறப்பிடம். ஆக, கடவுளே வன்முறையை ஆராதிக்கிறார்; ஆமோதிக்கிறார். அவருக்கே அது நல்லது எனும்போது, தேவைப்படும் சமயத்தில் எனக்கும் அது நல்லதுதானே. இந்த உலகத்தில் ஒவ்வோர் உணர்வுகளையும் வெளிப்படுத்த ஒரு தருணம் உண்டு. அதேபோல வன்முறையைப் பிரயோகிக்கவும் ஒரு தருணம் உண்டு.
கடவுள் பரிபூரணமானவர் எனில், அவர் வன்முறையைப் பயன்படுத்தியது சரிதான். எனும்போது, மனிதன் தாக்கப்படும் தருணங்களில் அவனுக்கும் மிகச் சரியான காரணம் கிடைக்கப்பெற்றால், வன்முறையைப் பிரயோகிக்க உரிமையுடைவனாகிறான். சில நேரங்களில் ஒடுக்கப்படும் மனிதன் வன்முறையை நோக்கிக் கடுமையாகத் தள்ளப்படுகிறான். புறக்கணிக்கப்பட்டவர்களும், நிராகரிக்கப்பட்டவர்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டு மதிக்கப்படும் வரையில், எங்கும் அமைதி இருக்காது. மரம் மட்டும்தான் வெட்டப்படும் போது அப்படியே நிற்கும்.”
நீண்ட நேரத்திற்குப் பிறகு, ஆய்வரங்கில் உரை நிகழ்த்துவது போல மீண்டும் பேசினார். ஆனால், நேர்காணலின் நோக்கம் வேறு திசையில் செல்கிறதோ என்ற உணர்வு தட்டவும் நேர்காணலின் இறுதிக் கேள்விகளைக் கேட்க திட்டமிட்டேன்.
“மிஷாவ்... உங்கள் குறிக்கோளை ஏறக்குறைய நான்கு தசாப்தங்களாக வெற்றிகரமாக நிலைநாட்டி விட்டீர்கள். மால்கம் கொலை செய்யப்பட்ட பின்பும்கூட உளவுத்துறை உங்களைக் கண்காணித்து வந்ததாகக் கருத இடமுள்ளதா? ஏனென்றால் அவர் கொல்லப்பட்டு மூன்று ஆண்டுகள் கழித்துத்தானே உங்கள் கடையை காலி செய்ய உத்தரவு வந்தது?”
“உளவுத்துறை கண்காணிப்பு பற்றியெல்லாம் நான் கவலைப்பட்டது கிடையாது. அதேசமயம் மால்கம் கொல்லப்பட்ட பின்பு, கறுப்பினம் அமைதியடைந்துவிட்டதா? அல்லது கறுப்பர்களுக்கான உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட்டுவிட்டதா? அகிம்சையை போதித்த மார்ட்டின் லூதர் கிங்கும் அதேபோல சுட்டுக் கொல்லப்பட்டாரே... மால்கம் கொல்லப்படும்போது அவருக்கு வயது 39. கிங் கொல்லப்படும் போது அவருக்கும் வயது 39தான். நிலைமை மாறாத போது, கோபமும் தொடரத்தானே செய்யும்.
“கிங் கொல்லப்பட்டு ஒரு மாதம் கழித்து (1968), நியூயார்க் மாகாணம் சார்பில் எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. என்னுடைய கடையையும், அருகிலிருக்கும் சில கடைகளையும் நியூயார்க் மாகாணம் சார்பில் வாங்கப்பட்டு, அங்கு மாகாண நிர்வாகத்துக்கான அரசு கட்டடம் கட்டப்பட இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அதனால் என்னுடைய கடையை உடனே காலி செய்யுமாறு உத்தரவிட்டார்கள். இதன் உள் நோக்கத்தை நான் நன்கு அறிந்திருந்தேன். அப்போது ஆளுநராக இருந்த ராக்ஃபெல்லரைச் சந்தித்து முறையிட்டேன்.
கடையைப் பார்க்க அவர் வருகை தந்தார். வந்தவர் அசந்து போய் விட்டார். ‘இதெல்லாமே கறுப்பர்களைப் பற்றிய புத்தகங்களா?’ எனக் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போனார். உடனே கடையை அகற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். நான் மறுப்பேதும் தெரிவிக்காமல், அரசு கட்டடம் கட்டியதும் அதில் எனக்கு ஓர் இடம் தந்தால் மீண்டும் இங்கேயே கடையை அமைத்துக் கொள்வேன் என கோரிக்கை வைத்தேன். அந்தக் கோரிக்கையை நினைவில் வைத்துக் கொள்வதாக ஆளுநரும் அப்போது தெரிவித்தார். ஆனால், அது நடக்கவில்லை...” ஏக்கப் பெருமூச்சு விட்டு நிறுத்தினார்.
ஆசுவாசமடைய இடைவெளிவிட்டேன். அந்த அறையில் கணத்த அமைதி நிலவியது. ஒரு நண்பரை பார்க்க வந்தது போலவோ, நீண்ட நாள் பார்க்காத உறவினரைச் சந்திக்க வந்திருந்தது போலவோ இருந்தால், அவர்களின் ஊனாகிப் போயிருந்த புத்தகக் கடை பற்றி மற்றவர்கள் பேசியிருப்பார்கள். நானும் கேட்டிருப்பேன். ஆனால், லூயிஸ் மிஷாவ் அவர்களை பிரத்யேகமாக நேர்காணல் செய்வதால், மிஷாவ்வின் மனைவி பெட்டியோ, மகன் லூயியோ பேசத் தயங்கினர்.
“என்ன நடந்தது? அரசு கட்டடம் கட்டிய பிறகு நீங்கள் ஏன் மீண்டும் அங்கு கடையைத் திறக்கவில்லை மிஷாவ்?”
“இவா... தந்தால்தானே? அடுத்த தேர்தலில் ராக் ஃபெல்லர் மீண்டும் ஆளுநராகத் தேர்வாகவில்லை. அவரின் வாக்குறுதியை அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. 125வது தெருவில் இருந்த கடையை, அந்தத் தெருவின் இறுதியில் இருந்த லெனாக்ஸ் அவென்யூவிற்கு மாற்றினோம்.
இது ஒரு வகையில் நல்லதாக அமைந்ததுன்னுதான் சொல்லுவேன். கடையை மாற்றும் சாக்கில் இருப்பைக் கணக்கெடுக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. சொன்னால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். இரண்டு லட்சத்து 25 ஆயிரம் புத்தகங்கள் இருந்தன. இது தவிர படங்கள், போஸ்டர்கள் எல்லாம் கணக்கில் இல்லை. கறுப்பர்களுக்கான புத்தகங்களைக் கொண்ட, உலகிலேயே மிகப்பெரும் கடை என்னுடைய கடைதான். தொடக்கத்துல கடையிலேயே சமைத்து சாப்பிட்டு, உண்டு உறங்கி ஒரு நாளக்கு அதிகப்ட்சமாக ஒன்றரை டாலர் அளவுக்கே வருவாய் வந்தது. கடைசியில, வாரத்திற்கு சுமார் பத்தாயிரம் புத்தகங்களை விற்கும் அளவுக்கு கடை வளர்ச்சியடைந்தது. கடந்த 30 வருஷத்துல ஒரு நாடகத்துக்கோ, ஒரு படத்துக்கோ நான் போனதில்ல…” பெருமிதத்தில் அவர் முகத்தில் ஓர் உவகையைக் காண முடிந்தது. ஐந்து புத்தகங்களோடு தொடங்கப்பட்ட, புத்தகக் கடை என்று சொல்ல முடியாத ஒரு கடை, ஆலமரம் போல ஓங்கி வளர்ந்திருப்பதைக் கண்டால் யாருக்கும் களிப்பு உண்டாகத்தானே செய்யும். 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஏறக்குறைய நான்கு தசாப்தங்களாக புத்தக விற்பனைப் பணியில், தவம் போல தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஒரு மனிதரை நேர்காணல் செய்கிறோம் என்பதை நினைக்கும் போதே என் உடலில் புல்லரித்தது.
“புதிய இடத்தில் கடைக்கு எப்படி ஆதரவு இருந்தது? வாடிக்கையாளர்களின் வருகையில் எந்தத் தொய்வும் ஏற்படவில்லைதானே மிஷாவ்?”
“ஆமாம் இவா... எந்தத் தொய்வும் ஏற்படவில்லை. ஹார்லெம் நகரின் ஓர் அடையாளம் என்னுடைய கடை. என்னுடைய கடைப் பெயரை ‘மிஷாவ்’ என்றே வாடிக்கையாளர்கள் அழைத்தனர். புத்தகக் கடைக்குப் போகிறேன் என்பதைச் சொல்ல, ‘மிஷாவ்’க்கு போயிட்டு வர்ரேன் என்றே சொல்லி வந்தனர். ‘மிஷாவ்’க்கு பக்கத்தில்தான் அந்த இடம் இருக்கிறது என ஒரு குறிப்பிட்ட இடத்தை அடையாளப்படுத்தக்கூட ‘மிஷாவ்’ என்றே சொல்லிப் பழகிவிட்டனர். ஒரு மலை, ஒரு நதி, ஒரு கடற்கரை போல, என்னுடைய கடையும் நில அடையாளமாகிப் போனது. அந்த நில அடையாளம் ‘மிஷாவ்’ என என் பெயரிலேயே விளிக்கப்பட்டது. அப்படி இருக்கையில் வியாபாரம் எப்படி குறையும்?”
“மிஷாவ்… அறிவுதான் ஆகப் பெரிய ஆயுதம், கறுப்பர்களை வாசிக்க வைக்க ஒரு கருத்தியல் பின்னணியில்தான் புத்தகக் கடையை ஆரம்பித்ததாக நேர்காணலின் தொடக்கத்தில் குறிப்பிட்டீர்கள். அந்த நோக்கத்தை முழுமையாக அடைந்து விட்டீர்களா?”
“ஆமாம்... உறுதியாகச் சொல்வேன், என்னுடைய இலக்கை அடைந்து விட்டேன் என்பதைத் திட்டவட்டமாகச் சொல்வேன்.” புற்றுநோய் தாக்கத்தின் களைப்பும் சோர்வும் நீங்கி புதுத் தெம்பு கிடைத்தவர் போல அவருடைய குரலில் திடம் இருந்தது.
“கறுப்பர்கள் புத்தகம் படிப்பார்களா? கறுப்பர்கள் நல்லா சாப்பிடுவாங்கன்னு சொன்ன, எனக்கு கடன் தர மறுத்த அந்த பேங்க் அதிகாரிதான் இப்போது என் நினைவுக்கு வருகிறார். கறுப்பர்களிடமிருந்து எதையாவது மறைக்க வேண்டுமென்றால், அதை புத்தகத்துக்குள் மறைத்து வைத்தால் பத்திரமாக இருக்கும் என்பது ஒரு தொல் நம்பிக்கை. ஆனால் இப்போது நிலைமையே வேறு மாதிரி. ஒரு நாள் கவிஞர் நிக்கி ஜியோவான்னி (Nikki Giovanni) கடைக்கு வந்தார். வந்தவரிடம் ‘கடையில் வைத்திருந்த உங்களுடைய புதிய கவிதைத் தொகுப்புகளைக் காணவில்லை, திருடிட்டாங்க போல...’ என்றேன். அவர் வருத்தப்பட்டார். ‘இதுக்கு ஏன் வருத்தப்படுறீங்க நிக்கி, உங்களுடைய கவிதைகளை வாசகர்கள் விரும்பிப் படிக்கிறாங்க...’ அப்டின்னு சொன்னதும் அவர் சிரித்து விட்டார்.
“புதிய தலைமுறை கறுப்பின மக்களிடம் வாசிப்புப் பழக்கம் எப்படி வந்ததுன்னு நினைக்கிறீங்க இவா...?”
“ஓஹோ... என்னை பேட்டி எடுக்குறீங்களா மிஷாவ்? இளம் தலைமுறை கறுப்பர்களிடம் தேடல் உருவாகி இருக்கிறது. சரியா?”
“மிகச் சரியாகச் சொன்னீங்க இவா... ”
“நான் சின்ன வயசா இருக்கும்போது, ‘நான் வரும் வரை எங்கேயும் போகக் கூடாது’ என ஒரு இடத்தில் இருக்கச் சொல்லிவிட்டு செல்லும் போது என்னுடைய தந்தை கூறுவது வழக்கம். அப்போது நான் எதுவும் திருப்பி கேட்டதில்லை.
ஆனால், இப்போது பிள்ளைகளிடம் அப்படிச் சொல்லிவிட்டுச் செல்ல முடியுமா? ஏன், எதுக்கு, எங்க போறீங்கன்னு கேள்வியால துளைச்சி எடுத்திடுவாங்க. அதாவது உண்மைகளை அறிந்து கொள்ள இந்தக் கால இளைஞர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இந்தத் தூண்டுதல் அவர்களை வாசிப்பு பக்கம் தள்ளியிருக்கு. அதே சமயத்துல அதற்கு ஓர் உந்து விசையா என்னோட கடையும் இருந்திருக்கு.”
- பக்கங்கள் புரளும்