குடியரசு நாள்: ஜன. 24, 26 தேதிகளில் சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே
வேவு வளையத்தில் புத்தக உலகின் டான்; ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை - பகுதி 18
அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் கறுப்பர்கள் திரளாக வாழும் நகரம் ஹார்லெம்.
உலகின் எந்தப் பகுதியில் வசித்தாலும், வாழ்நாளில் ஒரு முறையாவது அந்த நகரத்தைப் பார்த்துவிட வேண்டுமென கறுப்பர்கள் விரும்பும் புனித நகரமாக ஹார்லெம் பெயர் பெற்றிருந்தது. அந்த நகரத்தில் ஐந்து புத்தகங்களோடு தொடங்கப்பட்டு பிரமாண்டமாக வளர்ந்த, லூயிஸ் மிஷாவ் என்ற கறுப்பரால் நடத்தப்பட்ட புத்தகக் கடையை, வெள்ளை இனவெறியர்கள் கை வைக்கத் தயங்குவார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், அமெரிக்க உளவுத்துறை தன்னைக் கண்காணித்து வந்ததாகக் குறிப்பால் உணர்த்தும் அளவுக்கு மிஷாவ் என்ன செய்தார் என்பதை அறிய விரும்பினேன்.
“மிஷாவ்... எந்த நோக்கத்திற்காக கடையைத் தொடங்கினீர்களோ அதில் வெற்றி பெற்று விட்டீர்கள் என்பதற்கு, உங்கள் கடையின் வளர்ச்சியே சாட்சி. சர்ச்சைக்குரிய புத்தகத்தின் அட்டைப்படத்தை பெரிய போர்டாக வைத்த விவகாரத்தில், நீதிபதி சொன்ன தீர்ப்பை அமைதியாக ஏற்றுக்கொண்டீர்கள். அதற்கு, வியாபாரம் முக்கியம் என்ற தொனியில் எனக்கு பதில் சொன்னீர்கள். அப்படியிருக்கையில் உளவுத்துறை கண்காணிக்கும் அளவுக்கு என்ன செய்தீர்கள்?”
"இவா மிஷேல்... என்னதான் நான் வியாபாரியாக இருந்தாலும், இயல்பில் நானும் ஒரு கறுப்பன்தானே... வெறும் பணத்துக்காக, வருவாய்க்காக மட்டுமே கடை திறக்கலையே... புத்தக விற்பனையைத் தாண்டி ஏதாவது செய்யணும்னு எனக்கும் ஓர் ஆவல் இருக்காதா... அதுக்காக, பிரச்னைகளின் அடிப்படையில் அவ்வப்போது உருவாகும் அமைப்புகளில் இணைந்து செயல்பட்டிருக்கேன். அப்படி உருவான அமைப்பொன்றிற்கு நானே தலைமை தாங்கியிருக்கிறேன். ஹார்லெம் நகர செய்ற்பாட்டாளர்களை ஒருங்கிணைக்கும் முகமாக, 1961-ம் ஆண்டு நவம்பர் மாதம் ‘ஹார்லெம் ஆஃப்ரிக்க கறுப்பு தேசியவாதிகள் (Harlem African Black Nationalists)’ என்ற அமைப்பைத் தொடங்கினேன்.
கொஞ்சம் கொஞ்சமாக இந்த அமைப்பு விரிவடைந்து, ஹார்லெம் நகரைத் தாண்டி பிற நகர கறுப்பர்களும் நாங்கள் நடத்தும் கூட்டங்களில் பங்கெடுத்தனர். 1963-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த அமைப்பை ‘அமெரிக்காவில் வசிக்கும் ஆஃப்ரிக்கர்களின் கூட்டமைப்பு (African Nationals in America, Incorporated (ANAI)’ என பெயர் மாற்றினோம். கறுப்பர்களை இப்படி அமைப்பாகத் திரட்டினால் உளவுத்துறை சும்மா இருக்குமா? ஆனால், இதுமட்டுமே காரணம் இல்லை. மால்கமுடனான நட்புதான் என்னை உளவுத்துறை பின்தொடரக் காரணம் எனச் சொல்லலாம்...”
“ஓஹோ... பிற குடியுரிமை அமைப்புகளின் மேடைகளில் கறுப்பின தேசியவாதியாக உரையாற்றி இருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும். புத்தக விற்பனையைத் தாண்டி, நீங்களே இயக்கம் நடத்தி இருப்பதைக் கேட்க ஆச்சரியமாக இருக்கிறது. அது சரி... பின்னர் ஏன் மால்கமோடு இணைந்து பணியாற்றினீர்கள்?”
“மால்கமை ஏன் எங்களுக்கு அவ்வளவு பிடிக்குது… ரெண்டு பேருமே பள்ளிக் கல்வியையே முறையாகக் கற்காதவர்கள் என்பது காரணமாக இருக்கலாம். ரெண்டு பேருக்கும் ஒரே விதமான விருப்பங்கள் இருந்தது காரணமாக இருக்கலாம். என்னைப் போலவே அவருக்கும் புத்தகங்கள் பிடிக்கும். அலமாரியிலும் மேஜையிலும் தரையிலும் புத்தகங்கள் ததும்பி வழியும் அவர் வீட்டின் கீழ் தளத்தில் இருக்கும் போதும், என்னுடைய கடையின் பின்புற அறையிலும் இருக்கும்போதும் சொர்க்கத்தில் இருப்பதாகவே அவர் உணர்வார்.
“இன்னொரு மிக முக்கியமான காரணம் மக்களுடன் மக்களாக இருக்கவே அவர் பெரிதும் விரும்பினார். நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பில் அவர் ஒரு மிகப் பெரும் தலைவர். பாதுகாப்பு கருதி, அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு வரும் அத்தனை பேரையும் சோதனை செய்த பின்பே அரங்கத்திற்குள் அனுமதிப்பது வழக்கம். அந்த இயக்கத்தை விட்டு வெளியேறிய பின்பு இன்னும் இன்னும் அவர் மக்களுடன் நெருக்கமானார். அதுக்கு அவர் கொடுத்த விலை, தன்னுடைய உயிர்.
அவர் கொல்லப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு அமைப்பின் நிர்வாகிகளுக்கு இப்படி கட்டளையிட்டார்: என்னுடைய சொந்த மக்கள் மத்தியில் நான் பாதுகாப்பாக இல்லை என்றால், நான் எங்கு பாதுகாப்பாக இருக்க முடியும்? அதனால் கூட்டங்களுக்கு வரும் மக்களைப் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்த வேண்டாம் எனச் சொல்லிவிட்டார். அவர் கொல்லப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு நள்ளிரவில் அவர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை. இப்படி அவர் உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்தாலும் அவர் கலந்து கொண்ட கூட்டங்களில், பொதுமக்களை சோதனை செய்வதை அவர் விரும்பவில்லை. வழக்கம்போல சோதனை செய்திருந்தால், துப்பாக்கியோடு அவர் கூட்டத்துக்குள் புகுந்த கொலையாளிகளை முன்பே அடையாளம் கண்டு தடுத்திருக்க முடியும்.”
கண்ணாடியைக் கழற்றி கண்களில் கசிந்த ஈரத்தைத் துடைத்துக்கொண்ட மிஷாவ், ஓர் ஏக்கப் பெருமூச்சுவிட்டார். இனி மால்கமை எப்போதுமே சந்திக்கமுடியாது என்ற பெருந்துயரத்தை வெளிப்படுத்தியது அந்த மூச்சுக்காற்று.
நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பிலிருந்து மால்கம் வெளியேற்றப்பட்ட பின்பு, அவரின் வழிகாட்டியைப் போலவே மிஷாவ் செயல்பட்டதாக நான் கேள்விப்பட்டிருந்தேன். மிஷாவ் என்பவர், கறுப்பர்களால் கறுப்பர்களுக்காக எழுதப்பட்ட புத்தகங்களை விற்பனை செய்யும் ஒரு புத்தகக் கடைக்காரர் என்றுதான் மற்றவர்களுக்குத் தெரியும். ஆனால், அவருக்கு இன்னொரு முகம் இருந்தது. அதை இந்த நேர்காணலில் வெளிக்கொணர அவரே தொடரட்டும் என நானும் அமைதியாகக் காத்திருந்தேன்.
“ஒருநாள் கடையில் பேசிக் கொண்டிருக்கும்போது, ‘மிஷாவ்... இந்த வெள்ளைக்காரன் ஏராளமான விஷயங்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறான்’ என மால்கம் கூறினார். ‘ஆமாம் மால்கம்... தன் வினை தன்னைச் சுடும் (Chickens have finally come home to roost) என்பார்களே, அப்படிச் சொல்லிக் கொள்ளுங்கள்’ என்று நான் கூறினேன். இதை நன்றாக நினைவில் வைத்திருந்த அவர், அதிபர் கென்னடி கொலை தொடர்பாக (நவம்பர் 22, 1963) பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது, இதை அப்படியே சொல்லி விட்டார்.”
“ஐயயோ... மிக மிக மோசமான ஸ்டேட்மென்ட் ஆச்சே இது...” நான் பதறினேன்.
“அவ்வளவு மோசமான ஸ்டேட்மெண்ட் கிடையாது இவா... அதிபர் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் கொலை தொடர்பாக வெள்ளையர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இரண்டே நாளில் அவரையும் ஒருவர் சுட்டுக் கொல்ல, இதையெல்லாம் எப்படிப் பார்க்கிறீர்கள் எனக் கேட்டபோதுதான் மால்கம் இப்படிச் சொன்னார். இப்போது அவருடைய பதில் பொருத்தமான பதிலாக இருப்பதை நீங்கள் உணரலாம் இவா...”
“ஆமாம்... வெள்ளையர்களிடம் தூண்டிவிடப்பட்ட வன்முறை வெறியாட்டத்திற்கு அதிபரே பலியாகிவிட்டார் என்ற பொருளில் பதில் சொல்லியிருக்கிறார்...”
“ஆமாம். நான் அவருக்குக் கற்றுக் கொடுத்த வாசகங்கள் அவை. மால்கமை இயக்கத்திலிருந்து வெளியேற்றக் காத்திருந்தவர்கள், அதிபர் கென்னடி தொடர்பாக அவர் சொன்ன கருத்துக்கள் இயக்கத்தின் கட்டுப்பாட்டை மீறிய செயலாகக் கருதி, இயக்கத்திலிருந்து வெளியேற்றினர். 1964-ம் ஆண்டில் மார்ச் மாதத்தில், ‘முஸ்லிம் பள்ளிவாசல் கூட்டமைப்பு (Muslim Mosque Inc.)’ என்ற புதிய இயக்கத்தை மால்கம் தொடங்கினார். புதிய இயக்கத்தைத் தொடங்கிய கையோடு, சவூதி அரேபியாவிலுள்ள மெக்கா நகரத்துக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டார். புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு வந்தவர், என்னைச் சந்தித்து மிக முக்கியமான பார்வை மாற்றத்தை என்னோடு பகிர்ந்துகொண்டார்.”
“மிஷாவ்... நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லவில்லை. உங்களை உளவுத்துறை கண்காணிக்க வெறுமனே மால்கம் உங்கள் கடைக்கு வந்து சென்றது மட்டும்தான் காரணமா? நம்ப முடியவில்லையே...”
“இவா மேடம், அதைப் பற்றித்தான் சொல்ல வந்தேன். சொல்ல விடுங்களேன்...” அங்கலாய்த்துக் கொண்டார். மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தொடரச் சொன்னேன்.
“எனக்கும் மால்கமுக்குமான உரையாடலை அப்படியே சொல்கிறேன். குறித்துக் கொள்ளுங்கள் இவா...” நான் கட்டை விரலை உயர்த்தி ஆமோதித்தேன்.
“டாக்டர் மிஷாவ்... பழைய புத்தகத்தை புதிய பார்வையில் பார்க்கிறேன்.”
“எந்த பழைய புத்தகம் அது?” மால்கமிடம் வினவினேன்.
“முஸ்லிம் அமைப்பில் வெள்ளையர்கள் இணைய முடியாது என நான் ஏற்கனவே அங்கம் வகித்த நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பின் தலைவர் எலிஜா முஹம்மது எங்களுக்கு கற்றுத் தந்தார். ஆனால், புனித ஹஜ் யாத்திரையில் சூரியனுக்குக் கீழே இந்தப் பூமியில் எத்தனை நிற, இன, மொழி மக்கள் இருக்கிறார்களோ அத்தனை பேரையும் நான் அங்கு பார்த்தேன். அவர்கள் அனைவருமே முஸ்லிம்கள்தான். ஆக, அமெரிக்காவில் எங்களுக்கு கற்றுத் தரப்பட்ட இஸ்லாம் என்பது, ‘கறுப்பு கிறிஸ்தவம்’ போல ‘கறுப்பு இஸ்லாம்’ மதமாகும். நிறத்தின் காரணமாக இஸ்லாத்தில் பாகுபாடு என்பதே கிடையாது என்பதை புனித பயணத்தில் வைத்துத்தான் நான் உணர்ந்தேன்.”
“முஸ்லிம்களை மட்டும்தான் எலிஜா முஹம்மது இயக்கத்தில் இணைத்தார். ஆனால் 80 சதவீத கறுப்பர்கள் மதத்தை விரும்பவில்லை. அதனால் அவர்களுக்காக ஓர் இயக்கத்தைக் கட்டமைக்கப் போகிறேன்.”
“இவா மேடம், இப்படித்தான் மால்கம் X தலைமையில், ஆஃப்ரிக்க-அமெரிக்கர் ஒற்றுமைச் சங்கம் (Organization of Afro American Unity - OAAU) உதயமானது. இந்த அமைப்பின் உருவாக்கத்தில் என்னுடைய பங்கு கணிசமாக இருந்தது. சிந்தனை ரீதியாக மட்டுமல்ல, மதச்சார்பற்ற புதிய அமைப்புக்கு நிதியுதவியும் செய்திருக்கிறேன். நான் ஒரு சிறிய தொகையை மால்கமிடம் கொடுத்தபோது, அவர் `அல்லாஹ்வுக்கு நன்றி' என கூறினார். `அல்லாஹ் இந்தத் தொகையை தரவில்லை, நான்தான் தந்தேன்' என்றேன். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே சகோதரர் மிஷாவ்வுக்கு நன்றி என்று கூறினார்.”
மால்கம் X, அவருடனான நட்பு, அவருடைய மதச்சார்பற்ற அமைப்பின் தளகர்த்தர் என்ற அளவில் இதுவரை மிஷாவ் சொன்னதை வைத்து உளவுத்துறையின் நெருக்கடியும் தொடர் கண்காணிப்பும் எந்தளவுக்கு இருந்திருக்கும் என்பதை யூகித்துக் கொண்டேன்.
- பக்கங்கள் புரளும்