தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு: ராகுல் பெருமிதம்
தமிழகத்தில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாடு தொடங்கியதை தொல்லியல் துறை உறுதிப்படுத்தியுள்ளதை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி புகழ்ந்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் 'இரும்பின் தொன்மை' புத்தகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
கீழடி மற்றும் கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டினார். கீழடி இணையதளத்தினை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் இரும்பின் தொன்மை புத்தகம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில்,
இந்தியாவின் செழுமையான பாரம்பரியம் உலகிற்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. தமிழ்நாட்டின் சமீபத்திய தொல்லியல் கண்டுபிடிப்புகள் 5,300 ஆண்டுகளுக்கு முன்னர் இரும்பின் பயன்பாட்டை வெளிப்படுத்துகின்றன.
நாடு முழுவதும் எண்ணற்ற மைல்கற்களுடன் தமிழ்நாட்டின் பங்களிப்பு உள்ளது. இவை நாட்டில் புதுமை மற்றும் ஒற்றுமையைப் பிரதிபலிக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும், சமூகத்திலும், குரலிலும் செழித்து வளரும் இந்தியாவின் உணர்வைக் கொண்டாடுவோம் எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | கீழடி இணையதளம் தொடக்கம்: மெய்நிகர் விடியோவும் இணைப்பு