ரஞ்சி கோப்பையில் பேட்ஸ்மேன்கள் சொதப்பல்; ஜடேஜா அசத்தல்!
ரஞ்சி கோப்பையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், ரவீந்திர ஜடேஜா அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார்.
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்திய அணி வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ வழிகாட்டு நெறிமுறைகளை அண்மையில் வெளியிட்டது.
இதனையடுத்து, மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ரஞ்சி கோப்பையில் விளையாடி வருகின்றனர். இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ரிஷப் பந்த் போன்றோரும் ரஞ்சி கோப்பையில் விளையாடி வருகின்றனர்.
இதையும் படிக்க: ரோஹித் சர்மாவின் விக்கெட்டை கொண்டாடாத பந்துவீச்சாளர்; காரணம் என்ன?
பேட்ஸ்மேன்கள் சொதப்பல், ஜடேஜா அசத்தல்
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உள்பட வீரர்கள் பலரும் ரஞ்சி கோப்பையில் விளையாடி வருகின்றனர். இருப்பினும், பேட்ஸ்மேன்கள் பெரிதாக சோபிக்கவில்லை. அவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஜம்மு - காஷ்மீருக்கு எதிரான போட்டியில் மும்பை அணிக்காக முதல் இன்னிங்ஸில் விளையாடிய ரோஹித் சர்மா 3 ரன்களிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சௌராஷ்டிர அணிக்கு எதிரான போட்டியில் தில்லி அணிக்காக விளையாடிய ரிஷப் பந்த் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தவறிய நிலையில், இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா சௌராஷ்டிர அணிக்காக பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். தில்லிக்கு எதிரான போட்டியில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜடேஜாவின் அபார பந்துவீச்சினால், தில்லி அணி முதல் இன்னிங்ஸில் 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையும் படிக்க: வருண் சக்கரவர்த்திக்கு அபிஷேக் சர்மா பாராட்டு!
சௌராஷ்டிர அணிக்காக ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கில் 36 பந்துகளில் 38 ரன்கள் (2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள்) குவித்தது குறிப்பிடத்தக்கது.