தற்சார்பு பொருளாதாரமும் புத்தகக் கடையும் - ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை - பகுதி 15
அடிமை முறையை அமெரிக்க மண்ணிலிருந்து சட்டப்பூர்வமாக அகற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் மேலெழுந்த 19-ம் நூற்றாண்டிலேயே, புத்தகக் கடைகள் - கறுப்பர்களுக்கான பிரத்யேக புத்தகக் கடைகள் அமெரிக்காவில் உதயமாகத் தொடங்கி விட்டன.
அடிமை முறைக்கான எதிர்க்குரல்:
அடிமை முறைக்கு எதிராக குரல் எழுப்பி வந்த நியூயார்க் பிரபலம் டேவிட் ரக்கல்ஸ் என்பவரே, கறுப்பர்களுக்காக கறுப்பர்களால் எழுதப்பட்ட புத்தகங்களை விற்பனை செய்யும் புத்தகக் கடையை முதன் முதலில் தொடங்கினார். 1830-களில் மன்ஹாட்டன் நகரில் இயங்கி வந்த ரக்கல்ஸின் கடையில், அடிமை முறைக்கு எதிரான புத்தகங்களும் கறுப்பர்களால் எழுதப்பட்ட புத்தகங்களும் விற்பனை செய்யப்பட்டன. 19-ம் நூற்றாண்டின் இறுதியிலும், 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஆங்காங்கே, கறுப்பர்களுக்கான புத்தகக் கடைகள் திறக்கப்பட்டன, ஆனால், போதிய வியாபாரமில்லாமல் அந்தக் கடைகளெல்லாம் சொற்ப காலத்திலேயே மூடப்பட்டன.
அடிமை முறை சட்ட ரீதியாக ஒழிக்கப்பட்டாலும் அமெரிக்காவில் கறுப்பர்களை இன ரீதியாக ஒடுக்குவது அன்றாட நடைமுறையாகவே இருந்தது. பூங்கா, நூலகம். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் என பொது இடங்களில் கறுப்பர்கள் அனுமதிக்கப்படாமல் தடுக்கப்பட்டனர். கறுப்பர்களுக்கு தனி சலூன் கடைகள், தனி வழிபாட்டுத் தலங்கள், உணவகங்களில் அமர்ந்து சாப்பிடத் தடை என இனப்பாகுபாடு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டது.
இந்தப் பின்னணியில்தான், கறுப்பர்களை குடிமக்களாக அங்கீகரித்து, கறுப்பினமும் ஒரு தேசிய இனமாகக் கண்ணியத்துடன் வாழ அவர்களுக்கான உரிமைகள் முழுமையாக வழங்கப்பட்டு, அவர்களைத் கைதூக்கிவிட வேண்டுமென கறுப்பின சமூகத்திலிருந்தே குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. ‘கறுப்பின தேசியவாதம்’ இப்படியாக அமெரிக்காவில் முளைவிடத் தொடங்கியது.
அகிம்சை வழியிலான போராட்டம்:
அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க கறுப்பர்களுக்கு சட்டப்படி உரிமை அளிக்கப்பட்டிருந்தாலும், இனவெறி பிடித்த வெள்ளையர்கள், கறுப்பர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்காமல் தடைகளை வெட்டிப்போட்டு வந்தனர். வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டதோடு, அனைத்து வகையிலும் ஒடுக்கப்பட்டு, உயிரும் வாழ்வாதாரமும் வெள்ளை இனவெறியர்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த நிலையில், வன்முறையை கையிலெடுப்பதைத் தவிர வேறு சாத்தியக்கூறுகளே இல்லாதபோதும், அகிம்சை வழியிலான போராட்டத்தையே கறுப்பர்களும் கறுப்பின தலைவர்களும் கைக்கொண்டனர்.
அதற்குக் காரணம், அடிமைத்தளையில் நான்கு நூற்றாண்டுகள் கட்டுண்டு கிடந்த கறுப்பர்களின் உள்ளங்கள் பயத்தால் அஞ்சி நடுங்கிக் கரடு தட்டிப் போனதால், வெள்ளையர்களின் இன ஒதுக்கலை சகித்துக் கொண்டு வாழப் பழகிக் கொண்டனர். ஆனால், இளம் தலைமுறை கறுப்பர்கள் இனப்பாகுபாட்டுக்கு எதிராக மூர்க்கமாக குரல் எழுப்பினர், அணி திரண்டனர். அப்படி கிளர்ந்தெழும் போதெல்லாம், அவர்களை போலீஸ் கடுமையாக அடக்கி ஒடுக்கியது. மறுபுறம் இனவெறி பிடித்த வெள்ளையர்கள், தீவிரவாதக் குழுக்களை உருவாக்கி, குரல் உயர்த்தும் கறுப்பர்களை தேடித் தேடிக் கொன்றனர். கறுப்பர்களின் வாழ்வாதாரமும் உயிர்களும் கொத்து கொத்தாக அழிக்கப்பட்டன.
அடிமை விலங்கை உடைத்தெறிந்து, வெள்ளையர்களைப் போல, அனைத்து மனித உரிமைகளையும் பெற்ற ஓர் இனமாக கறுப்பினம் மாற கல்வி அவசியம் என்பதை கறுப்பினத் தலைவர்கள் உணரத் தலைப்பட்டனர். அதேபோல, அடிமை ஊழியம் செய்வதால்தானே வெள்ளையனின் காலை நக்கிக் கிடக்க வேண்டியிருக்கிறது என்பதை உணர்ந்த கறுப்பின உணர்வாளர்கள், பொருளாதார விடுதலையே அடிமைத்தளையை அகற்ற உதவும் என்பதிலும் உறுதியாக இருந்தனர்.
மேடைப் பேச்சுக்கள் வழியாக விடுதலை உணர்வு:
கறுப்பர்கள் கிளர்ந்தெழ அவர்களை முதலில் அறிவெழுச்சி பெறச் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்த கறுப்பின தேசியவாதிகள், அடிமை வரலாற்றை அறிந்து கொள்ள கறுப்பர்களை ஊக்குவித்தனர். ‘நீக்ரோக்களுக்கு’ வரலாறு கிடையாது, ஆனால் ‘ஆஃப்ரிக்கர்களுக்கு’ வரலாறு உண்டு. துண்டுப் பிரசுரங்கள், அறிக்கைகள், மேடைப் பேச்சுக்கள் வழியாக கறுப்பர்களிடம் விடுதலை உணர்வு தட்டி எழுப்பப்பட்டது.
அடிமைத்தளையை அறுத்தெறிந்து சுந்தந்திரக் காற்றை சுவாசிக்க தற்சார்பு பொருளாதாரத்தை கறுப்பினத்தின் தலைவர்கள் முன்மொழிந்தனர். அதாவது சிறு கடைகள், உணவகங்கள் போன்ற நிறுவனங்களை கறுப்பர்கள் சொந்தமாகத் தொடங்கி அதில் கறுப்பர்களை பணிக்கமர்த்தி சுயசார்பாக வாழும் சூழலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டுமென்று விழைந்தனர். லாபம் என்பதை இரண்டாம்பட்சமாக வைத்து, வேலைக்காக - ஊதியத்துக்காக வெள்ளையர்களை நம்பி இருக்கும் நிலையை படிப்படியாக மாற்ற வேண்டும் என்பதில் கறுப்பின தேசியவாதத் தலைவர்கள் உறுதியாக இருந்தனர்.
அப்படியான கறுப்பின தேசியவாதிகளில் ஒருவரான மார்கஸ் கார்வேயின் சிந்தனைகளால் ஊட்டம் பெற்றே, கறுப்பர்களால், கறுப்பர்களுக்காக எழுதப்பட்ட புத்தகங்களை விற்பனை செய்யும் கறுப்பராக அமெரிக்காவில் அடையாளம் பெற்றார் லூயிஸ் மிஷாவ்.
கறுப்பின தேசியவாத சிந்தனைகளின் ஊற்றாக புத்தகக் கடைகளே செயல்பட்டன. புத்தகங்கள் வழியாக அறிவூட்டம் வழங்கியதோடு, சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் வாசகர்களும் சந்தித்து விவாதித்து உத்வேகம் பெற்றுக்கொள்ளும் மையங்களாகவும் புத்தகக் கடைகளே விளங்கின. 1960-களில், கறுப்பின தேசியவாதிகள் தங்கள் அமைப்பின் குறிக்கோள்கள் மற்றும் சித்தாந்தத்தை பரவலாக்குவதற்கான பிரதான வழியாக புத்தக விற்பனையைக் கருதினர்.
முக்கிய களம் - புத்தகக் கடை:
இயக்கத்திற்கு ஆட்சேர்க்கும் முக்கிய களமாக புத்தகக் கடைகளையே பெரிதும் நம்பி இருந்தன. இதனால், மற்ற கடைகளைப் போல வியாபார நோக்கிலான லாபம் ஈட்டும் கடைகளாக புத்தகக் கடைகள் செயல்படவில்லை. உண்மையில், அப்போது கறுப்பின சிந்தனையாளர்கள் மத்தியில் பெரிதும் விவாதிக்கப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருந்த ‘தற்சார்பு பொருளாதாரம்’ என்ற சித்தாந்தத்தின் முன்னோடி நிறுவனங்களாக புத்தகக் கடைகளே செயல்பட்டன.
பல்சமூகம் வாழும் நகரில் செயல்படும் வியாபார நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட இனத்துக்கு மட்டும்தான் வியாபரம் செய்வோம், மற்றவர்களுக்கு வியாபாரம் செய்ய மாட்டோம் என்றால் அந்த நிறுவனம் வணிக நோக்கில் தோல்வியடைவது உறுதி. ஆனால், விடுதலை உணர்வை ஊட்டும் பயிற்சி பட்டறைகளாக, இனவெறி தலைக்கேறிய வெள்ளையர்களுக்கு எதிராக கச்சைக் கட்டிக் கொண்டு செயல்படும் அமைப்புகளின் அதிகாரப்பூர்வமற்ற அலுவலகங்களாக செயல்பட்ட புத்தகக் கடைகள், வெள்ளை வாடிக்கையாளர்களை நம்பி செயல்பட முடியாதுதானே.
தற்சார்பு பொருளாதாரம்:
இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில், வணிக நடவடிக்கைகள் வாயிலாக கறுப்பின முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் பார்வையை முன்வைத்த புக்கர் டி. வாஷிங்டன், ‘சந்தை உலகத்திற்கு பங்களிப்புச் செய்யாத எந்த இனமும் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது’ என எச்சரித்தார். இருப்பினும், 1900-மாவது ஆண்டில் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட ‘தேசிய கறுப்பின வணிக கூட்டமைப்பு (National Negro Business League - NNBA)’, தற்சார்பு பொருளாதாரம் என்ற பெயரில் வெள்ளையர்களுடனான உறவை முறித்துக் கொள்ளும் சிந்தனையிலிருந்து விலகியே நின்றது. இந்த நழுவல் போக்கை கறுப்பின தேசியவாதிகள் கடுமையாக விமர்சித்தனர், எதிர்த்தனர்.
அமெரிக்க வணிக நிறுவனங்கள் கறுப்பர்களை வேலைக்கு சேர்க்காமல் இனப்பாகுபாட்டில் உறுதியாக இருந்தது மட்டுமல்ல, கறுப்பு நிறத்தை இழிவாகக் காட்டி வெள்ளையர்களைப் போல ஆக வேண்டுமெனில் இன்னின்ன பொருள்களைப் பயன்படுத்துங்கள் என கறுப்பர்களையே நுகர்வோர்களாக்கிச் சுரண்டிக் கொழுத்த நிலையில், தற்சார்பு பொருளாதாரக் கொள்கை மூலம் வெள்ளையர்களின் வணிகத்தைப் புறந்தள்ளி அவர்களைப் பழிவாங்க வேண்டுமென்பதில் கறுப்பின தேசியவாதிகள் உறுதியாக இருந்தனர்.
கறுப்பின மக்கள் சக்தி:
அதேசமயம், கறுப்பர்களின் வாசிப்பு பழக்கம், அவர்களின் வாங்கும் சக்தி ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால், தற்சார்பு பொருளாதாரக் கொள்கையை புத்தகக் கடைகள் கடைபிடிப்பதென்பது தற்கொலைக்குச் சமமாகும். இருப்பினும், அமெரிக்க தேசத்தில் 1960-களில் ‘கறுப்பின மக்கள் சக்தி (Black Power)’ எழுச்சியடைய புத்தகக் கடைகளே வலுவான காரணங்களாக இருந்தன. இரண்டு கோடி கறுப்பர்கள் வசித்த அமெரிக்காவில் ஒரு சில கறுப்பின புத்தகக் கடைகளே இருந்தன. கறுப்பின தேசியவாதிகளின் தொடர் முயற்சியால் கறுப்பின மக்களிடையே வாசிப்பு பழக்கம் மேம்பட்டதை மறுக்க முடியாது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு புத்தகங்களுக்கான தேவை அதிகரித்து இலக்கியச் சந்தைக்கு புத்துயிரூட்டியதால் புத்தக விற்பனை உயர்ந்தது. 1952 மற்றும் 1962-க்கு இடையில், அமெரிக்காவில் அச்சிடப்பட்ட தலைப்புகளின் எண்ணிக்கை சுமார் 11 ஆயிரத்திலிருந்து கிட்டத்தட்ட 22 ஆயிரமாக, இருமடங்காக உயர்ந்தது. இதனால் கடைகள் புத்தகங்களை வாங்கி குவித்தன. 1963 மற்றும் 1971-க்கு இடையில் மட்டும், புத்தகங்களின் தேசிய விற்பனை 1.7 பில்லியன் டாலரிலிருந்து 3.1 பில்லியன் டாலராக (83%) அதிகரித்தது. கல்வி நிலையங்களின் விரிவாக்கமும் மாணவர் சேர்க்கை அதிகரித்ததும் புத்தக விற்பனை உயர முக்கிய காரணமாகும். மற்றொருபுறம் கறுப்பர்களின் சராசரி வருவாயும் அதிகரித்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கறுப்பர்களிடமிருந்து எதையாவது மறைக்க வேண்டுமென்றால் அதை, `புத்தகத்தின் உள்ளே வைத்து விடு' எனச் சொல்லுமளவுக்கு கறுப்பர்களின் வாசிப்பு பழக்கம் இருந்தது. புத்தகங்களை திருடிக்கூட வாசிக்கும் பழக்கம் அவர்களிடம் உருவாகவில்லை என்ற நிலையில் புத்தக விற்பனை இந்தளவுக்கு எகிறியது என்பது வியப்பான செய்தி அல்ல.
கறுப்பர்களிடம் மட்டுமே பொருட்களை வாங்குவோம் என்ற சிந்தனை ஊட்டம் பெற்று, 70 சதவீத கறுப்பர்கள் இந்தச் சிந்தனைக்கு உயிரூட்டினர் என்பதுவே வியப்பான செய்தியாகும். இந்த நிலையை எட்டியதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று கறுப்பர்கள் நடத்தி வந்த புத்தகக் கடைகளே.
- பக்கங்கள் புரளும்