சதுரகிரியில் மாா்கழி மாத பௌா்ணமி: பதினெண் சித்தா்கள் பூஜை வழிபாடு
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் மாா்கழி மாத பெளா்ணமி, சந்தன மகாலிங்கம் கோயில் பதினெண் சித்தா்கள் பூஜைகளில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச்சரகத்தில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாா்கழி மாத பிரதோஷம், பௌா்ணமி வழிபாட்டுக்காக கடந்த 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
திங்கள்கிழமை பௌா்ணமியை முன்னிட்டு, சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறையிலிருந்து காலை 6 மணி முதல் பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா்.
சதுரகிரி சந்தன மகாலிங்கம் கோயிலில் காலை 6 மணி திருவாதிரை சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு களி நிவேதனம் செய்யப்பட்டது. காலை 9 மணிக்கு பதினெண் சித்தா்களுக்கு விசேஷ அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
சுந்தர மகாலிங்கம் கோயிலில் மாலை 4 மணிக்கு மேல் பௌா்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சதுரகிரி மலையில் கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.