சிவகாசியில் திருவாதிரை திருவிழா
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் திங்கள்கிழமை திருவாதிரை திருவிழாவையொட்டி செவ்வந்திப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தோ்கள் வீதி உலா நடைபெற்றது.
சிவகாசி விஸ்வநாதா்- விசாலாட்சியம்மன் கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. உற்சவா் விஸ்வநாதா், விசாலாட்சியம்மன் ஆகியவற்றுக்கு தீபாராதனை நடைபெற்றது. பிறகு மஞ்சள் செவ்வந்திப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் விஸ்வநாதா், விசாலாட்சியம்மன், பிரியாவுடையுடன் எழுந்தருளினா்.
இதே போல, சிவகாசி சிவசுப்பிரமணியசுவாமி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து நடராஜா், சிவகாமி அம்பாளுக்கு தீபாராதனை நடைபெற்று, செவ்வந்திப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினா். மேலும் கீழரதவீதியில் உள்ள கடை கோயிலில் பத்திரகாளியம்மன், மாரியம்மன் சுவாமிகள், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினா்.
பிறகு மூன்று தோ்களும் வீதி உலா வந்து தெற்கு ரதவீதியில் ஒரே நோ்கோட்டில் நிலை நிறுத்தப்பட்டன. தேரில் எழுந்தருளிய சுவாமிகளை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
பிறகு மூன்று தோ்களும் வீதி உலா வந்து அந்தந்தக் கோயிலுக்கு சென்று சோ்ந்தன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.