நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்: ராகுல் காந்தி
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் இருந்து தொடங்கிய ஒற்றுமை நடைப்பயணத்தின் ஓராண்டு நிறைவையொட்டி ராகுல் காந்தி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
2024 ஜன. 14ஆம் தேதி மணிப்பூரில் இருந்து காங்கிரஸ் சார்பில் ஒற்றுமை நடைப்பயணம் தொடங்கியது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 15 மாநிலங்களைக் கடந்து 6600 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒற்றுமை நடைப்பயணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, ஜன. 12 முதல் மார்ச் 16 வரை மணிப்பூரில் இருந்து மும்பை வரை ஒற்றுமை நடைப்பயணம் நடைபெற்றது.
ஒற்றுமை நடைப்பயணத்தின் ஒராண்டு நிறைவு குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
''6,700 கிலோமீட்டர் பயணம், கோடிக்கணக்கான இந்தியர்களின் ஆதரவு, பன்முகத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சங்கமம், ஒற்றுமை நடைப்பயணத்தின் முதலாம் ஆண்டு விழாவில் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மணிப்பூர் முதல் மும்பை வரை ஒவ்வொரு வகையான அநீதியையும் நாங்கள் கண்டோம், ஒவ்வொரு வகுப்பினரின் துன்பத்தையும் புரிந்துகொண்டோம், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பாகுபாட்டை உணர்ந்தோம்.
நாங்கள் நீதி என்ற குறிக்கோளுடன் தொடங்கினோம் - மாற்றம் தொடங்கியது. இந்தியா விழித்தெழுந்து தனது உரிமைகளுக்காகப் போராடியது. இந்தப் போராட்டம் நீண்டது, ஆனால் உறுதியானது - நீதி கிடைக்கும் வரை இது தொடரும் எனப் பதிவிட்டுள்ளார்.