பெங்களூரில் விரைவில் ஸ்பெயின் தூதரகம் திறப்பு! - அமைச்சர் ஜெய்சங்கர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் விரைவில் ஸ்பெயின் நாட்டுத் தூதரகம் திறக்கப்படும் என ஸ்பெயின் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர் அங்குள்ள இந்தியர்களிடம் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர் விரைவில் பெங்களூரில் ஸ்பெயின் நாட்டின் தூதரகம் திறக்கப்படவுள்ளதாகக் கூறியுள்ளார்.
இருநாட்டின் வர்த்தகமும் பெருகி வரும் நிலையில், இருநாட்டின் உறவுகளை மேம்படுத்த தூதரகம் அமைக்கப்படும் என அவர் பேசினார். மேலும், வரக்கூடிய 2026 ஆம் ஆண்டு இருநாடுகளும் அவர்களது கலாச்சாரத்தையும், சுற்றுலாத்துறையையும், செய்யறிவு ஆகியவற்றில் முன்னேற்றம் காணுவதற்காக இந்தாண்டு (2025) கடுமையாக உழைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க:உலகம் முழுக்கச் செல்லும் மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லை: ஜெய்ராம் ரமேஷ்
முன்னதாக, கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்னர்தான் ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் இந்தியா வந்திருந்தார். அதன் பிறகு முதன்முறையாக தற்போது ஸ்பெயின் சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஸ் மேனுவலை சந்தித்து பேசினார்.
அப்போது, இரு நாடுகளுக்கும் மத்தியிலான உள்ளூர் மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்து கலந்துரையாற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.