சீனாவில் பரவும் புதிய தீநுண்மி: மக்கள் அச்சப்பட வேண்டாம் -தமிழக பொது சுகாதாரத் ...
நிசப்தமாக ஓர் அறிவுப் புரட்சி; மால்கம் X உடனான முரண் - ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை| பகுதி 12
1930-களின் இறுதியில் தொடங்கப்பட்ட தேசிய நினைவு ஆஃப்ரிக்க புத்தகக் கடை பத்தாண்டுகளில் கற்பனைக்கு அப்பாற்பட்ட வளர்ச்சியைத் தொட்டது.
பதிப்புத் துறையில் லூயிஸ் மிஷாவ் பேசுபொருளானதைத் தொடர்ந்து ஏராரளமான பதிப்பகங்கள் புத்தகங்களைக் கொண்டு வந்து கடையில் இறக்கின. ஹார்லெம் நகரின் பரந்த வீதிகளில் ஒன்றான 125வது சாலையின் நடைபாதையில் ஒடுக்கமான முகப்பாக தென்படுவதால், வெளியில் இருந்து பார்க்கும்போது சிறிய புத்தகக் கடையாக அது இருக்கும் என்றே அந்த வழியாகப் போவோர் வருவோர் நினைப்பது வழக்கம்.
இந்த நினைப்போடு கடைக்குள் நுழைவோர் வியப்பில் மலைத்து விடுவர். கொஞ்சம் அகலமான நீண்ட நடைபாதை, அதனையடுத்து பரந்த கூடம், அதில் அலமாரிகளில் அடுக்கப்பட்ட புத்தகங்கள், மீண்டும் உள்ளொடுங்கும் பாதை, அந்தப் பாதையின் இறுதியில் இன்னொரு அறை என ஒரு பின் பகுதி. இவ்வளவு விசாலமான இடமிருந்தும் நிற்கக்கூட இடமில்லாமல் ஆங்காங்கே நடைவழியெங்கும் புத்தகங்கள் குவியல் குவியலாக சிதறிக் கிடக்கும்.
புனைவு, அபுனைவு, கவிதை, அறிவியல், மருத்துவம், மதம் என தலைப்புவாரியாக புத்தகங்கள் பிரித்து அடுக்கப்பட்டிருந்தாலும், நடைவழியெங்கும் சிந்திச் சிதறிக் கிடக்கும் குவியல்களிலும் நீங்கள் தேடும் புத்தகங்கள் கிடைக்கலாம். கறுப்பர்களால் கறுப்பர்களுக்காக இவ்வளவு தலைப்புகளில் புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளனவா என்ற பிரமிப்பு நிச்சயம் ஏற்படும். நம் கண் பார்வை மட்டத்தின் நிலைதான் இது. வாடிக்கையாளர்களின் தலைக்கு மேலே சுவற்றில் ஆஃப்ரிக்க தலைவர்கள், கறுப்பின பிரபலங்களின் புகைப்படங்கள் தொங்கவிடப்பட்டிருக்கும். நீங்கள் புத்தகத்தைத் தேடி எடுக்கும்போது, அவர்கள் நம்மைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற பிரமை ஏற்படுவதைத் தவிர்க்கஇயலாது.
மிஷாவ்வின் புத்தகக் கடை வெற்றிகரமாக இயங்கியதால், எழுத்தாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்ததோடு, அவர்களின் வருவாயும் உயரத் தொடங்கியது. இதனால், எழுத்தாளர்களிடம் நம்பிக்கை ஏற்பட்டு, மிஷாவ் மீதான மரியாதையும் எழுத்தாளர்கள் வட்டத்தில் அதிகரித்தது. இந்த ஆரோக்கியமான சூழல் ஏராளமான புதிய எழுத்தாளர்களை எழுதத் தூண்டியது.
கறுப்பர்களின் பொருளாதாரம் ஒன்றும் அப்படிச் சொல்லிக் கொள்ளும்படி கிடையாது. சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து வந்தவர் என்பதால், மிஷாவ்வுக்கு இது நன்றாகவே தெரியும். அவரே ஹோட்டல் ஜன்னல்களைக் கழுவி வயிற்றைக் கழுவியவர்தானே. அதனால், கடைக்கு வந்து புத்தகங்களை எடுத்துப் பார்த்து விட்டு போதிய பணம் இன்றி, புத்தகத்தை வாங்க முடியாமல் தவிப்பவர்களைக் கண்காணித்து, அவர்களை கடையின் பின் பகுதி அறைக்கு அழைத்துச் செல்வது மிஷாவ்வின் வழக்கம்.
கடையின் பின்பகுதியை ஒரு நூலகம் போல் அவர் பாவித்தார். அங்கு அமர்ந்து புத்தகங்களை வாசிப்பதற்கு ஏதுவாக இருக்கைகளைப் போட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். வீட்டுக்குப் புத்தகங்களை எடுத்துச்சென்று படிக்கவும் அனுமதி அளித்தார். அறிவுத் தேடலில் பசியோடு வரும் யாரையும் பட்டினியோடு அவர் அனுப்பியது கிடையாது. இலவசமாக படிக்கக் கொடுத்தால் புத்தக வியாபாரம் பாதிக்கப்படும் என குதர்க்கமாக அவர் யோசிக்கவில்லை. வறுமையில் வாடிய கறுப்பர்கள், மிஷாவ்வின் கடையை நூலகம் போல பயன்படுத்தி, தொடர்ந்து வாசித்து உத்வேகம் பெற்றனர். அந்த வகையில் கறுப்பின இளைஞர்கள் மத்தியில் ஓர் அறிவுப் புரட்சியை அமைதியாக மேற்கொண்டு வந்தார் லூயிஸ் மிஷாவ்.
வாடிக்கையாளர்கள் புத்தகங்களைத் தேடிக்கொண்டிருக்கும் போது, கடையை மூடும் நேரம் வந்துவிட்டால், அவர்களை அவசரப்படுத்தாமல் மிஷாவ் காத்திருப்பார். இதனால் பெரும்பாலான நாட்களில் அவர் வீட்டுக்கு இரவு தாமதமாகவே சென்றிருக்கிறார். மிகவும் தாமதமானால், கடையிலேயே புத்தகங்களோடு புத்தகங்களாகத் தூங்கிவிடுவார்.
பிரபல கறுப்பினப் போராளியும் ஆற்றல்மிக்க பேச்சாளரும் ஹார்லெம் நகரின் பிரஜையுமான மால்கம் X இந்த நூலகத்தில் அமர்ந்து படிப்பது வழக்கம். அவருடைய உரைக்குத் தேவையான குறிப்புகளை பெரும்பாலும் மிஷாவ்வின் புத்தகக் கடையிலிருந்தே எடுத்திருக்கிறார். பல தடவை இரவு நேரங்களில் கடைக்குள் அவரை வைத்து, வெளியில் பூட்டி விட்டு மிஷாவ் வீட்டுக்குச் சென்றுவிடுவார். இரவு முழுவதும் வாசித்து விட்டு புத்தகக் குவியல் மேலேயே அசந்து தூங்கி விடுவதும் காலையில் கடையைத் திறந்து மால்கமை எழுப்பி விடுவதும் மிஷாவ்வின் வழக்கம்.
ஹார்லெம் நகரின் பிரபலமான அடையாளங்களில் ஒன்றான தெரஸா ஹோட்டல் அருகிலேயே இருப்பதால், அங்கு வந்து தங்கும் வெளி மாகாண, வெளிநாட்டு மக்களும் தேசிய நினைவு ஆஃப்ரிக்க புத்தகக் கடைக்கு வந்து சென்றனர். அப்படி அடிக்கடி வந்து செல்லும் ஒருவர் சொன்ன தகவல்கள்தான் இவை அனைத்தும். லூயிஸ் மிஷாவ்வும் மால்கமும் நெருங்கிய நண்பர்கள். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டச் சொல்லும் அகிம்சை வழி போராட்டங்களையும், அப்படி போராடச் சொல்லி கறுப்பர்களை வற்புறுத்தும் குடியுரிமை அமைப்புகளையும் மால்கம் X வெறுத்தது போலவே, மிஷாவ்வும் வெறுத்தார். வெள்ளையர்களோடு ‘ஒன்றிணந்து’ செல்ல விரும்பும் கறுப்பின குடியுரிமை அமைப்புகள் மீது மிஷாவ்வுக்கு ஓர் ஒவ்வாமை இருந்தது..
தான் அங்கம் வகித்த நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பின் தளகர்த்தரான மால்கம் X நாடு முழுவதும் சுற்றி வந்து அமைப்பை வளர்த்தெடுத்தார். அவர் ஹார்லெம் நகரில் இருக்கும் தருணங்களில் பெரும்பாலான நேரத்தை மிஷாவ்வின் கடையில்தான் கழிப்பார். மால்கமை தொடர்புகொள்ள புத்தகக் கடையின் தொலைபேசியில் அழைப்பதும், மால்கமுக்கு கடிதம் எழுதுவோர் புத்தகக் கடையின் முகவரிக்கு அனுப்புவதும் வாடிக்கை. தேசிய நினைவு ஆஃப்ரிக்க புத்தகக் கடை மால்கமின் அறிவிக்கப்படாத இன்னொரு அலுவலகம் போல செயல்பட்டது.
கறுப்பர்களின் வாழ்வாதாரத்தை, உயிரைப் பறிப்பவர்களுக்கு அதற்கு இணையான பாதிப்புகளை ஏற்படுத்தினால்தான், மீண்டும் கறுப்பர்கள் மீது கை வைக்க இனவெறியர்கள் அஞ்சுவார்கள் என அதிரடியாக போதித்தவர் - பிரசாரம் செய்தவர் மால்கம் X. இந்தப் பார்வையில் முற்றிலும் உடன்பாடு கொண்டவர் லூயிஸ் மிஷாவ். இதுவே இருவரையும் பிணைத்திருக்கலாம். ஆனால் ஒரு புள்ளியில் இருவரும் நேரெதிராக நின்றனர். மதம் தொடர்பில் இருவரும் எதிரெதிர் முனையில் தீவிர நிலைப்பாடு கொண்டவர்களாக இருந்தனர். கறுப்பர்களின் பிரச்னைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் இஸ்லாமிய மார்க்கம்தான் தீர்வு என்பதில் மால்கம் X உறுதியாக இருந்தார். லூயிஸ் மிஷாவ்வோ எந்தக் கடவுள் மீதும் அக்கறையற்றவராக கறாரான நாத்திகராக இருந்தார்.
“மிஷாவ், உங்களுக்கும் மால்கமுக்குமான நட்பு எப்போது தொடங்கியது? கடவுள் மறுப்பாளரான நீங்கள் எப்படி இஸ்லாமிய மார்க்கத்தை போதித்த மால்கமோடு நெருக்கமானீர்கள்?”
இதுவரை அவருக்கு மிக விருப்பமான புத்தக வியாபாரம் தொடர்பான கேள்விகளால் உற்சாகமாக பதிலளித்து வந்தவர், மால்கம் X பற்றி கேட்கத் தொடங்கியதும் அவருடைய முகம் சடுதியில் மாற்றமடைந்தது. எதுவும் பேசாமல் ஏதோ யோசனையில் அமைதியாக இருந்தார். எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க சங்கடப்படாதவர், இந்தக் கேள்விக்கு பதிலளிக்கத் தயங்கித் தேங்கினார். அவருடைய சங்கட்டமான நிலையை அறிந்த, அந்த அறையில் இருந்த கல்லூரி மாணவர் போல தோற்றம் தந்தவர், “நான் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லலாமா மேடம்?” என கேட்கவும், அப்போதுதான் எனக்கு பொறி தட்டியது. அந்த அறையில் இருந்த ஒரு அம்மாவும் இந்த இளைஞரும் யார்? “புரஃபஸர் இவர் உங்க மனைவி வில்லி ஆன், இவர் உங்க மகனா?”
திடீரென உம்மென்று இருந்த மிஷாவ் இந்தக் கேள்வியை நான் கேட்டதும் கொல்லெனச் சிரித்து விட்டார். “நீங்க கேட்டது சரிதான் இவர் என் மகன், இவர் என் மனைவி. ஆனா, வில்லி ஆன் இல்லை.”
“என்ன? வில்லி ஆன் இல்லையா? உங்கள் மனைவி பெயர் வில்லி ஆன் தானே?”
“இவர் என் மனைவிதான், ஆனால் இவர் பெயர் வில்லி ஆன் இல்லை…”
- பக்கங்கள் திறக்கும்