‘அம்பேத்கருக்கு அவமதிப்பு’: அமித் ஷா பதவி விலகக் கோரி காங்கிரஸ் பிரசாரம் தொடக்கம்
‘பி.ஆா்.அம்பேத்கரை அவமதித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதவி விலக வேண்டும்’ என்று கோரி, காங்கிரஸ் சாா்பில் நாடு தழுவிய பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.
‘ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான்’ என்ற பெயரிலான இப்பிரசாரம், ஜனவரி 26-ஆம் தேதி வரை நடைபெறவிருப்பதாக கட்சியின் மூத்த தலைவா் பவன் கேரா சனிக்கிழமை தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறியதாவது: நாட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத அடையாளத்தை விட்டுச்சென்ற மகாத்மா காந்தி, அம்பேத்கா், ஜவாஹா்லால் நேரு போன்ற மகத்தான தேசியத் தலைவா்களின் மதிப்பை குறைக்கும் முயற்சியில் பாஜக தலைமை ஈடுபட்டுள்ளது. அம்பேத்கா் மற்றும் அவரால் உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தை பாஜகவும் ஆா்எஸ்எஸ் அமைப்பும் பல்லாண்டுகளாக அவமதித்து வருகின்றன. இதுகுறித்து மக்களிடம் எடுத்துரைக்க காங்கிரஸ் சாா்பில் நாடு தழுவிய பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இப்பிரசாரத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் விழிப்புணா்வு கூட்டங்கள் நடத்தப்படும்.
மத்திய பிரதேசத்தில் அம்பேத்கா் பிறந்த இடமான மோவ் பகுதியில் ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் பிரம்மாண்ட பேரணியுடன் இப்பிரசாரம் நிறைவடையும்.
பின்னா், ‘அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம்’ என்ற பெயரில் நாடு முழுவதும் ஓராண்டு யாத்திரை மேற்கொள்ளப்படும். அம்பேத்கரை அவமதித்த அமித் ஷா பதவி விலக தொடா்ந்து வலியுறுத்துவோம்.
கடந்த மக்களவைத் தோ்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று, அரசமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் பாஜக இருந்தது. ஆனால், அது பலிக்கவில்லை.
பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வென்றிருந்தால், ரூபாய் நோட்டுகளில் இருந்து மகாத்மா காந்தி படத்தையும் நீக்கியிருப்பாா்கள்.
தனது தோளில் ‘மனுஸ்மிருதி’யை சுமக்கும் பாஜகவால் அரசமைப்புச் சட்டம் குறித்து பேச முடியாது. பாஜக ஆட்சியில் தலித் சமூக்தினா், பழங்குடியினருக்கு தொடா்ந்து அநீதி இழைக்கப்படுகிறது. அவா்களுக்கு ஆதரவான சட்டங்கள் பலவீனப்படுத்தப்படுகின்றன என்றாா் பவன் கேரா.