விண்வெளியில் துளிர்விட்டுள்ள இலைகள்: இஸ்ரோ சாதனை!
விண்வெளியில் முளைவிட்டிருக்கும் காராமணி விதைகளில் இன்று(ஜன. 6) இலை துளிர்விட்டிருப்பதாக இந்திய விண்வெளி ஆரய்ச்சி நிறுவனம்(இஸ்ரோ) தெரிவித்துள்ளது. அந்த புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
விண்வெளிக்கு ‘பிஎஸ்எல்வி-சி60 பிஓஇஎம்-4’ விண்கலத்தில் அனுப்பப்பட்டுள்ள விதைகள் முளைத்து அவற்றில் இலைகளும் துளிர்விட்டிருப்பது விண்வெளியில் செடி வளர்ப்பு ஆராய்ச்சியில் மைல்கல் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக, விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்ட காராமணி விதைகள் முளைவிட்டிருப்பதாக கடந்த இரு நாள்களுக்கு முன் இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில், முளைவிட்ட காராமணியில், விரைவில் இலைகள் வளருமென எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தது.
முதலில் ஏழு நாள்களுக்குள் விதை முளைவிடுமென விஞ்ஞானிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஆச்சரியமடையும் வகையில் நான்கு நாள்களில் காராமணி விதை முளைத்திருப்பதாகவும் இஸ்ரோ தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டுள்ளது.
இந்த நிலையில், விண்வெளியில் மனிதர்கள் வாழ்வது குறித்த ஆராய்ச்சியில் மேற்கண்ட சாதனையானது முக்கிய நகர்வாக அமைந்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.