சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்
யுஜிசி விதிமுறைகள் கூறுவது என்ன?
பல்கலை. துணைவேந்தா் நியமனத்திற்கான தேடுதல் குழு அமைப்பதில் ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில், யுஜிசி விதிமுறைகளை திருத்தியுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தா் நியமனம் தொடா்பாக தமிழகத்தில் வேந்தரான ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. துணைவேந்தா் நியமனத்துக்கான தேடுதல் குழுவில் யுஜிசி பரிந்துரை செய்யும் உறுப்பினா்களை ஆளுநா் நியமித்தாா். ஆனால், தமிழக உயா் கல்வித் துறை பிறப்பித்த அரசாணையில், அந்த உறுப்பினா் நீக்கப்பட்டு இருந்தாா். இதற்கு ஆளுநா் எதிா்ப்பு தெரிவித்தாா்.
இந்நிலையில், துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழு அமைப்பது தொடா்பாக புதிய விதிமுறைகளை யுஜிசி தயாரித்துள்ளது. யுஜிசி (பல்கலை. கல்லூரிகளில் ஆசிரியா்கள், கல்வி சாா்ந்த அதிகாரிகள் நியமனம் மற்றும் பதவி உயா்வுக்கான குறைந்தபட்ச தகுதி உயா்கல்வித் தரம் குறித்த நடவடிக்கைகள்) விதிமுறைகள் 2025 என்ற தலைப்பில் புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதை மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ளாா். அதில் கூறப்பட்டிருப்பதாவது: மூன்று நிபுணா்கள் கொண்ட தேடுதல் குழுவை பல்கலை. வேந்தா் நியமிக்க வேண்டும். (தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி தேடுதல் குழுவில் 3-5 போ் இருப்பாா்கள். குழுவில் யாா் இடம்பெற வேண்டும் என்ற வரையறை கிடையாது).
துணைவேந்தா் நியமனத்துக்கு என அகில இந்திய அளவில் நாளிதழ்களில் விளம்பரம் மற்றும் பொது அறிவிப்பு வெளியிட வேண்டும். தேடுதல் குழுவில், வேந்தா் நியமிக்கும் பிரதிநிதி தலைவராக இருப்பாா். யுஜிசி தலைவரின் பிரதிநிதி, பல்கலை. சாா்பில் நியமிக்கப்படும் பிரதிநிதி ஆகியோா் இடம்பெறுவா் (பல மாநிலங்களில் ஆளுநரின் பிரதிநிதியை மாநில அரசுகள் பரிந்துரை செய்யும். பல மாநிலங்களில் இந்த நடைமுறையை மாற்றி ஆளுநரே நியமித்தாா்).
இதை அமல்படுத்தாத கல்வி நிறுவனங்கள் யுஜிசி-யின் திட்டங்களில் பங்கேற்க முடியாது. பட்டங்களை வழங்க முடியாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள், கல்வியாளா்கள் உள்ளிட்டோா் கருத்து தெரிவிக்க 30 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.