திருப்பதி: வைகுண்ட ஏகாதசி தரிசன டோக்கன் பெற கட்டுக்கடங்காத கூட்டம் - நெரிசலில் 4 பேர் பலி!
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி டோக்கன்களைப் பெற பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியிருந்ததால் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது.
வைகுண்ட ஏகாதசி வெள்ளிக்கிழமை(ஜன. 10) கொண்டாடப்படும் நிலையில், இதற்காக திருப்பதி உள்பட வைணவத் திருத்தலங்களில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இந்த நிலையில், திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி நாளில் சாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கான சர்வ தரிசன டோக்கன்கள் விஷ்ணு நிவாசம் வளாகத்தில் வழங்கப்படுவதாக இருந்தது. இதை பெறுவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கே காத்திருந்தனர். அப்போது டோக்கன்களைப் பெற கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. நெரிசலில் காயமடைந்தோருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நெரிசலில் சிக்கி இன்னும் பலர் பலியாகியிருக்கக்கூடுமென அஞ்சப்படுகிறது. உயிரிழந்தோரில் தமிழக பக்தர்களும் இருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்து சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் விரிவன தகவல்களை தெரிவிப்பார்கள் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.