எதிர்ப்பை மீறி காதல் திருமணம்... விருந்தில் விஷம் கலந்த தாய்மாமன்!
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் தனது எதிர்ப்பை மீறி சகோதரியின் மகள் காதல் திருமணம் செய்ததினால், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தாய் மாமன் விஷம் கலந்துள்ளார்.
அம்மாவட்டத்தின் உட்ரே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தை எதிர்த்து தனது காதலரை திருமணம் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அப்பெண்ணின் வீட்டார் சம்மதித்து அவர்களுக்கு கடந்த ஜன.7 அன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு, மணமகளின் தாய் மாமாவான மகேஷ் பாடில் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது எதிர்ப்பை மீறி சகோதரியின் மகள் காதல் திருமணம் செய்துக்கொண்டதினால், அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட உணவில் மகேஷ் பாடில் விஷம் கல்ந்துள்ளார். அப்போது, மண்டபத்திலிருந்த விருந்தினர்கள் சிலர் இதை கவனித்து அவரை தடுத்துள்ளனர்.
இதையும் படிக்க:தப்பியோடிய 8 காப்பக சிறுமிகளில் 7 பேர் மீட்பு!
தனது சம்மதம் இல்லாமல் அந்த திருமணம் நடந்ததினால் அவர் இவ்வாறு செய்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். உணவில் விஷம் கலக்கப்பட்டதை அறிந்தது விருந்தினர் யாரும் உணவை சாப்பிடாததினால் எந்தவொரு அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.
இதுகுறித்து, தகவல் அறிந்த அம்மாநில காவல் துறையினர் அங்கு விரைந்து விஷம் கலக்கப்பட்ட உணவின் மாதிரிகளை சேகரித்து, ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தப்பியோடிய மகேஷ் பாடில் மீது விஷப் பொருள்களை அலட்சியமாக கையாண்டதற்காகவும், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதற்காகவும் சட்டப் பிரிவு 286 மற்றும் 125 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தப்பியோடிய அவரைத் தேடி வருவதாக தெரிவித்துள்ளார்.