அடுத்த தலைமுறை தகுதியோட தான் வர்றாங்க! - Director Shankar Interview | Game Chang...
கோவை: கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண் வெளியீடு
பொங்கல் தொடர் விடுமுறை அடுத்து கோவையில் இருந்து ஆம்னி பேருந்துகளில் வெளியூர் செல்லும் பொதுமக்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் செல்லும் மக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுதொடர்பாக பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு ஆம்னி பேருந்துகளில் செல்லும் பொதுமக்கள் கூடுதல் கட்டணம் மற்றும் பிற குறைபாடுகள் காரணமாக பல இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். இதனை தடுக்கும் நடவடிக்கையாக வியாழக்கிழமை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் போக்குவரத்து காவல் துறையினருடன் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதையும் படிக்க |மகளிர் உரிமைத் தொகை: பொங்கலுக்காக முன்கூட்டியே வரவு வைப்பு!
இந்த கூட்டத்தில் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் நிலையான கட்டணம் வசூலிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டு உள்ளது. மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் மக்களிடம் இருந்து புகார் மனுக்கள் ஏதும் வராத வண்ணம் செய்யப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அதிக கட்டணம் வசூல் செய்யும் ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை அடுத்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ஏமாறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து மக்கள் 9384808304 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அல்லது வாட்ஸ்ஆப் மூலம் புகார் அளிக்கலாம். புகாரில், பயணி பெயர், தொலைபேசி எண், பயண தேதி, சென்ற இடம், டிக்கெட் புகைப்படம், கட்டண விவரம், பேருந்து எண் மற்றும் பெயர் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.