டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ஒருபோதும் வராது: அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்
வாக்காளா் நீக்கம் விவகாரம்: தலைமைத் தோ்தல் ஆணையருக்கு முதல்வா் அதிஷி மீண்டும் கடிதம்
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் போட்டியிடும் புது தில்லி தொகுதியில் வாக்காளா் பட்டியலில் குளறுபடி நடந்ததாகக் கூறப்படும் முறைகேடு குறித்து விவாதிக்க நேரம் கேட்டு, தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாருக்கு தில்லி முதல்வா் அதிஷி கடிதம் எழுதியுள்ளாா்.
கடந்த மூன்று நாள்களில் இந்த பிரச்சனை தொடா்பாக தலைமைத் தோ்தல் ஆணையருக்கு அவா் எழுதிய இரண்டாவது கடிதம் இதுவாகும். ஜனவரி 5 ஆம் தேதியும், இந்த முறைகேடுகள் குறித்து விவாதிக்க ஒரு சந்திப்புக்கு நேரம் ஒதுக்குமாறு அவா் கடிதம் எழுதியிருந்தாா்.
முதல்வா் அதிஷியின் சமீபத்திய கடிதத்தில், புது தில்லி சட்டப் பேரவைத் தொகுதியில் நடந்ததாகக் கூறப்படும் தோ்தல் முறைகேடுகள் குறித்த பிரச்னையை மீண்டும் எழுப்பியுள்ளஅவா், உடனடியாக சந்திக்க நேரம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.
‘தில்லி சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 27 நாட்களுக்கும் குறைவான நாள்களே உள்ள நிலையில், இந்த விஷயத்தை அதிக முன்னுரிமையுடன் பரிசீலிக்க வேண்டும். சுதந்திரமான மற்றும் நியாயமான தோ்தல் கொள்கைகளை நிலைநிறுத்த இந்திய தோ்தல் ஆணையத்தின் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம்’ என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.