மோசடி வழக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்!
போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று(ஜன. 9) நேரில் ஆஜரானார்.
தமிழகத்தில் கடந்த 2011-2015 அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பலரிடமும் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனா்.
இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் சேர்த்து மொத்தம் 2 ஆயிரத்து 222 போ் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதையும் படிக்க: திருப்பதி கூட்ட நெரிசல்.. என்ன நேர்ந்தது? ரூ.25 லட்சம் இழப்பீடு?
இதில் முதற்கட்டமாக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 150 பேருக்கு நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
குற்றம் சாட்டப்பட்ட 2,222 பேரில் ஜன. 6 முதல் ஜன. 8 வரை செந்தில் பாலாஜி உள்பட 150 பேர் ஏற்கெனவே ஆஜராகியுள்ளனர்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று(ஜன. 9) விசாரணைக்கு வந்த நிலையில், அடுத்த விசாரணையின்போது 150 பேரும் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்து, இவ்வழக்கு பிப். 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.