பெரியார் பற்றி சர்ச்சைப் பேச்சு: சீமான் மீது திமுக, திராவிடர் விடுதலைக் கழகம் புகார்!
பெரியார் குறித்து அவதூறாகப் பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் பற்றி சர்சைக்குரிய வகையில் பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பெரியாருக்கும் சமூக சீர்திருத்தத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? என பேசியிருந்த சீமான், இன்றும் செய்தியாளர்கள் சந்திப்பில், 'வள்ளலாரைத்தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்துவிட்டார்?' எனப் பேசினார்.
இதற்கு பெரியார் ஆதரவு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதையும் படிக்க | பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்துவிட்டார்? - சீமான் சர்ச்சைப் பேச்சு!
இந்நிலையில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, பெரியார் குறித்து பொய்யான தகவலைக் கூறிய சீமான் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டுமென திமுகவும் புகார் அளித்துள்ளது.
முன்னதாக, சீமான் வீட்டை முற்றுகையிடச் சென்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.