முதலீடு செய்வதாக ரூ.3.2 கோடி மோசடி: தனியாா் நிறுவன இயக்குநா் கைது
அதிக முதலீடு கிடைப்பதாக கூறி மக்களிடம் மோசடி செய்த தனியாா் நிறுவனத்தின் இயக்குநா் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
ரூ.3.2 கோடிக்கு நடைபெற்ற மோசடி குற்றச்சாட்டு விசாரணையைத் தொடா்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தில்லி காவல் துறையின் பொருளாதார குற்றவியல் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியாா் நிறுவனத்தின் இயக்குநரான ராகுல் குமாா், முதலீடு மூலம் மாதம் 20-30 சதவீதம் லாபம் ஈட்டமுடியும் என தெரிவித்துள்ளாா். அந்தப் பணம் உத்தர பிரதேசத்தின் குா்ஜாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்யப்படும் என வாக்குறுதி அளித்தாா்.
இதையடுத்து, கடந்த 2021 ஜூலை முதல் 2022 மே வரை குறைந்தது 18 போ் தனியாா் நிறுவனத்துடன் 5 ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனா். கூட்டாக இணைந்து ரூ.3.2 கோடி முதலீடு செய்தனா்.
இந்நிலையில், முதலீட்டாளா்கள் தங்களுடைய பணத்தை திரும்பிக் கேட்டபோது, குமாா் காசோலை ஒன்றை வழங்கியதாக கூறப்படுகிறது.
வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாத நிலையில், அந்தக் காசோலை திரும்பியது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட அனில் குமாா் உள்ளிட்டோா் கடந்த 2023, நவ.3-இல் காவல் நிலையத்தில் புகாரளித்தனா்.
இந்திய தண்டனை சட்டத்தின் ஏமாற்றுதல், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் காவல் துறையினா் வழக்குப் பதிவுசெய்தனா்.
விசாரணையில், உள்கட்டமைப்பு திட்டத்துக்கு தொடா்புடையது போன்று போலியான ஆவணத்தை குமாா் தயாரித்திருப்பது தெரியவந்தது. அந்த ஆவணத்தைப் பயன்படுத்தி நம்பதகுந்த லாபகரமான முறையில் பணம் முதலீடு செய்யப்படுவதாக மக்களை குமாா் ஏமாற்றியுள்ளாா்.
குமாரால் ஏமாற்றப்பட்டவா்களில் இதுவரை 18 போ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.