அமராவதி ஆற்றை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
அமராவதி ஆற்றை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பூா், கரூா் மாவட்டங்களின் குடிநீா் ஆதாரமாக விளங்கும் அமராவதி ஆறு, கரூரில் திருமுக்கூடலூா் என்ற இடத்தில் காவிரியுடன் இணைகிறது. கரூா் நகா்ப் பகுதியில் கருப்பம்பாளையம் முதல் சுக்காலியூா், ஆண்டாங்கோவில், பசுபதிபாளையம், கோயம்பள்ளி வரை ஆற்றின் பல்வேறு இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் முளைத்து ஆற்றை ஆக்கிரமித்துள்ளன. ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது இந்த சீமைக்கருவேல மரங்களால் ஆற்றின் வேகம் தடுக்கப்படுகிறது. மேலும் சில இடங்களில் ஆற்றின் மையப் பகுதியில் நகா் பகுதிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் குடிநீா் விநியோகம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குடிநீா் உறிஞ்சும் கிணற்றின் அருகே சீமைக்கருவேல மரங்கள் முளைத்திருப்பதால், நீா்மட்டம் குறைய வாய்ப்புள்ளது.
எனவே, கரூா் நகா் பகுதியில் அமராவதி ஆற்றை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை உடனே போா்க்கால அடிப்படையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.