Food & Health: சமைக்காத உணவுகள்; சத்தான உணவுகள்... செய்வது எப்படி?
பேரீட்சை கீர்
200 கிராம் பேரீட்சைப் பழங்களை ஊறவைத்து கொட்டை நீக்கி மிக்ஸியில் அடித்து சாறு எடுக்கவும். 2 மூடி தேங்காய்த்துருவலை அரைத்து பால் எடுத்து, தேவையான நீர் கலந்து ஏலக்காய்த்தூள், பேரீட்சைச் சாறை சேர்க்கவும்.
பலன்கள்: குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். சளி, இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள், இதை காலை டிபனாக சாப்பிடலாம். ரத்தம் விருத்தியாகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும், தெம்பும் கூடும்.
காரட் கீர்
500 கிராம் காரட்டை கழுவிச் சுத்தம் செய்து துருவி மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும். 2 மூடி தேங்காய் துருவலை மிக்ஸியில் அரைத்து தேங்காய்ப்பால் எடுக்கவும். இந்த இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து தேவையான தண்ணீர் கலந்து, 200 கிராம் வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் கலந்து பருகலாம்.
பலன்கள்: கண்ணுக்கு மிகவும் நல்லது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலையில் கொடுக்கலாம். தொடர்ந்து சாப்பிட, புற்றுநோய் விலகும். குடல் புண் சரியாகும்.
பச்சைப்பயறு
நல்ல குடிநீரில் எட்டு மணி நேரம் ஊறவைத்து, நன்றாகக் கழுவி, ஈரமான பருத்தித் துணியில் கட்டி முளைக்கவிடவும். காலையில் ஊறவைத்து மாலையில் நீரை வடித்துக் கட்டினால், மறுநாள் அதிகாலை வெள்ளை முளை எட்டிப் பார்க்கும். தினமும் ஒரு நபருக்கு 50 முதல் 100 கிராம் வரை தேவைப்படும்.பல்லால் கடிக்க முடியாதவர்கள், இந்த முளைப் பயறை நீர் சேர்த்து அரைத்து அதில் வெல்லம், தேன், தேங்காய் துருவல், உலர் திராட்சை சேர்த்து காலை டிஃபனுக்கு பதிலாக சாப்பிடலாம்.
பலன்கள்: அதிகப் புரதச்சத்து இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டத்தைத் தரும். அல்சரைக் கட்டுப்படுத்தும். சருமத்தைப் பளிச்சென வைத்திருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
எள்ளு லட்டு
400 கிராம் வறுத்த எள், 300 கிராம் கொட்டை நீக்கிய பேரீட்சை அல்லது வெல்லம், உலர் திராட்சை 100 கிராம், முந்திரி 50 கிராம், ஏலக்காய்த்தூள் சிறிதளவு.
எள்ளை மிக்சியில் அரைத்து அதனுடன் உலர் திராட்சையும் பேரீட்சையையும் கழுவி வெல்லம் சேர்த்து அரைக்கவும். விருப்பப்பட்டால், பனங்கற்கண்டு சேர்க்கலாம். ஏலத்தூள், முந்திரி கலந்து சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
பலன்கள்: நல்ல சத்தான உணவு. உடல் இளைத்தவர்கள் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வர, உடல் தேறும். நல்ல தெம்பு கிடைக்கும். பசி தாங்கும் உணவு இது. மலச்சிக்கல் நீங்கும். பெண்களின் தாய்ப்பால் அதிகம் சுரக்க எள்ளு லட்டை சாப்பிடலாம்.
வேர்க்கடலை - பொட்டுக்கடலை லட்டு
300 கிராம் வறுத்த வேர்க்கடலை, 150 கிராம் பொட்டுக்கடலை இரண்டையும் மிக்ஸியில் அரைத்து, பேரீட்சை, உலர் திராட்சை சேர்த்து அரைத்து ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பைக் கலந்து சிறு உருண்டைகளாகப் பிடிக்கலாம். தேவைப்பட்டால், தேன் அல்லது நெய் சேர்க்கலாம்.
பலன்கள்: பசியைப் போக்கும். உடலுக்கு தெம்பைக்கூட்டும். உரமாய் வைத்திடும். உடல் உழைப்பாளர்கள் அடிக்கடி சாப்பிடலாம். போஷாக்கு நிறைந்த உணவு.
நெல்லிக்காய் துவையல்
250 முழு நெல்லிக்காய்களை நறுக்கி கொட்டைகளை நீக்கவும். சிறிது நேரம் நறுக்கிய நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறவைத்து, 5 பல் பூண்டின் தோலை நீக்கவும். 20 கிராம் இஞ்சித் தோலை நீக்கி நறுக்கி எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும். இதனுடன் மிளகுத்தூள், பிளாக்சால்ட் சிறிதளவு சேர்த்துக் கலக்கவும்.
பலன்கள்: ஊறுகாய்க்கு பதில் பயன்படுத்தலாம். சகல நோய்களையும் தீர்க்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. நன்றாகப் பசியெடுக்கும். அஜீரணக் கோளாறு விலகும். இளமையைத் தக்கவைக்கும். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
ஃப்ரூட் சாலட்
ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, பேரீட்சை, மாம்பழம், பாப்பாளி, சப்போட்டா, ஆரஞ்சு, மாதுளை, கொய்யா இவை கலந்த கலவை தலா 500 கிராம் எடுத்து நன்றாகக் கழுவவும். தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி கொட்டைகளை நீக்கவும். மாதுளை முத்துக்களை உதிர்த்துக் கொள்ளவும். எல்லாப் பழங்களையும் கலந்து அத்துடன் தேன் அல்லது வெல்லம் தூள், முந்திரி, ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் கலந்து சாப்பிடலாம். இதை உணவுக்கு முன் சாப்பிடலாம்.
பலன்கள்: மலச்சிக்கல், குடல்புண், பசியின்மை விலகும். உடலுக்கு உடனடி சக்தி தரும். சிறுநீர் எரிச்சல், நீர் பிரியாமை உடலின் மூலச்சூடு குறையும்.
வெள்ளரிப் பச்சடி
வெள்ளரி, காரட்டை நீளவாக்கில் நறுக்கி, கொத்தமல்லி, கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிக் சேர்க்கவும். இதனுடன் தயிர், பிளாக் சால்ட், மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும். இதேபோல், வெங்காயம், வெண்பூசணி, சுரைக்காய், சௌசௌ போன்ற பல வகைப் பச்சடிகளை தினம் ஒன்றாகச் செய்து சாப்பிடலாம்.
பலன்கள்: அதிக அமிலங்களால் அவதிப்படும் உடலுக்கு வெள்ளரியே மாமருந்து. குடல் புண் சரியாகும். ஒபிசிட்டி பிரச்னை இருப்பவர்கள், சிறுநீரகக் கல்அடைப்பு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்துசாப்பிடலாம். கொலஸ்ட்ராலைக் குறைக்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதால், மூல நோய் இருப்பவர்கள் சாப்பிடலாம். தோல் நோய் பிரச்னையும் தீரும்.
வெஜிடபிள் அவல் மிக்ஸ்
அவலை சுத்தம் செய்து நீரில் கழுவி வடித்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். வெங்காயம், காரட், தக்காளி, கோஸ், குடமிளகாய், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை அனைத்தையும் பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் சீவி நறுக்கவும். எலுமிச்சம்பழத்தை சாறு எடுக்கவும்.
ஊறிய அவலுடன் எல்லாவற்றையும் சேர்த்து தேங்காய் துருவல், மிளகுத்தூள், சீரகத்தூள், பிளாக் சால்ட் சேர்த்து எலுமிச்சை சாறு விட்டு கலக்கவும்.
பலன்கள்: சர்க்கரை நோயாளிகள் மதிய உணவாக சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம், மலக்கட்டு, ஒபிசிட்டி, குடல் புண், வயிற்றுவலி, மூட்டுவலி, அதிக உடல் எடை இருப்பவர்கள் தினமும் சாப்பிட்டு வர, நல்ல பலன் கிடைக்கும்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...