சஞ்சய் ராயின் தண்டனையை அதிகரிக்கக்கோரி சிபிஐ மேல்முறையீட்டு மனு!
மங்களூரு வங்கிக் கொள்ளையா் வீட்டில் போலீசார் சோதனை: பணம், நகை பறிமுதல்
மங்களூரு அருகே துப்பாக்கி முனையில் வங்கியில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி வீட்டில் மங்களூர் போலீசார் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை சோதனை நடத்தியதில் கோடிக்கணக்கான பணம், தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கா்நாடக மாநிலம்,மங்களூரு அருகே கே.சி.சாலையில் உள்ள கோட்டேகர் வேளாண் கூட்டுறவு சங்க வங்கியில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜன.17) 6 பேர் கொண்ட கும்பல் நுழைந்து, ஊழியர்களை அச்சுறுத்தி வங்கியைக் கொள்ளையடித்தது.
இந்த கொள்ளையில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டு மும்பையில் வசித்துவரும் 3 பேர் கொண்ட கும்பலுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டம் பத்மநேரியைச் சோ்ந்த முருகாண்டி, அவரது நண்பா் யோஸ்வா ஆகிய இருவரை அம்பாசமுத்திரம் பகுதியில் மங்களூரு போலீசார் கைது செய்தனா்.
இதையும் படிக்க |ஆட்டுவிக்கும் இடத்தில் கட்சி தாவிய தலைவா்கள்! தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் 2025
பின்னா், இருவருக்கும் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை நடத்திவிட்டு குற்றவியல் நடுவா்மன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தினா். அவா்களை கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்த எல்லைக்குள்பட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமைக்குள் (ஜன.24) ஆஜா்படுத்துமாறு நடுவா்மன்ற நீதிபதி அச்சுந்தன் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, மங்களூரு போலீசார் இருவரையும் அழைத்துச் சென்றனா்.
இந்த நிலையில், வங்கிக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய பத்மனேரியில் உள்ள குற்றவாளி முருகாண்டி (35) வீட்டில் மங்களூர் போலீசார்
வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை நடத்திய சோதனையில் கோடிக்கணக்கான பணம் மற்றும் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.