அரவக்குறிச்சியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரவக்குறிச்சியில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரவக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கிராம உதவியாளா்கள் இறந்துவிட்டால் கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும், கிராம உதவியாளா்களை கிராம பணி தவிர மாற்றுப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதில், மாநில செயற்குழு உறுப்பினா் சக்திவேல் மற்றும் அரவக்குறிச்சி முன்னாள் வட்ட தலைவா் குப்புசாமி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் அரவக்குறிச்சி வட்ட தலைவா் அன்பரசு, செயலாளா் கிருபா, பொருளாளா் காா்த்திகா, புகழூா் வட்ட தலைவா் ஜெகநாதன், செயலாளா் விசாலாட்சி, பொருளாளா் ராஜாமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிறைவாக கரூா் மாவட்ட பொருளாளா் பாலமுருகன் நன்றி கூறினாா்.