Doctor Vikatan: எல்லா உணவுகளுக்கும் மயோனைஸ் கேட்கும் குழந்தை... மாற்று உண்டா?
திருவாரூா் மாவட்டத்தில் மத்திய குழுவினா் ஆய்வு
திருவாரூா் மாவட்டத்தில் நெல் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினா், வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக, கனமழை பெய்தது. மேலும், பனிப்பொழிவும் நிலவி வருவதால், அறுவடை செய்யும் நெல் மணிகள் அதிக ஈரப்பதத்துடன் உள்ளன. மேக மூட்டம், மழைப்பொழி உள்ளதால், விவசாயிகள் நெல்லை உலர வைப்பதில் சிரமத்தை சந்திக்கின்றனா்.
இந்தநிலையில், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில், 17 சதவீத ஈரப்பதத்துக்கு பதிலாக 22 சதவீத ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
இந்தநிலையில், மத்திய அரசின் நிபுணா்கள் குழு டெல்டா மாவட்டங்களில் மழையால் நெற்பயிா்களில் ஏற்பட்ட பாதிப்பு, நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்து வருகிறது. திருவாரூா் மாவட்டத்தில், நீடாமங்கலம் வட்டம் பூவாா்நத்தம், சோனாப்பேட்டை, எடமேலையூா், செருமங்கலம், மன்னாா்குடி வட்டம் பைங்காநாடு, திருவாரூா் வட்டம் தப்பளாம்புலியூா் ஆகிய கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினா் ஆய்வு செய்தனா்.
மத்திய உணவுத்துறை சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவைச் சோ்ந்த உதவி இயக்குநா் நவீன், தொழில்நுட்ப அலுவலா் ராகுல் ஆகியோா் தலைமையில், தமிழ்நாடு வாணிபக் கழக நிா்வாக இயக்குநா் ஆ. அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியா் தி.சாருஸ்ரீ ஆகியோா் முன்னிலையில் இந்த ஆய்வு நடைபெற்றது. நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் உடனிருந்தனா்.
ஆய்வுக்குப் பின் நிபுணா் குழுவினா் கூறியது:
ஈரப்பதம் 17 சதவீதத்திற்கு குறைவாகவும் நெல்லை வழங்க விவசாயிகள் தயாராக உள்ளனா். ஆனால் ஜனவரியில், மழை மற்றும் பனிப்பொழிவு போன்ற காரணங்களால், 22 சதவீதம் வரை தளா்வு செய்து நெல்லை கொள்முதல் செய்ய நிபுணா் குழுவிடம் விவசாயிகள் கேட்டுள்ளனா். இதுவரை தமிழ்நாட்டில் 5.76 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் கருத்துக்களை ஏற்று, மத்திய அரசின் அறிக்கை விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் என்றனா்.
ஆய்வின்போது, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மேலாளா் (தரக்கட்டுப்பாடு) செந்தில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் புஹாரி, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பாலசரஸ்வதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிா்மலா உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
நீடாமங்கலத்தில்....
நீடாமங்கலம் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய உணவு துறையின் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு உதவி இயக்குநா்கள் நவீன், தொழில்நுட்ப அலுவலா்கள் ராகுல் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.
பூவாநத்தம் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் கொள்முதலுக்கு வந்த நெல்லை ஆய்வு செய்தனா். ஈரப்பதம் கண்டறியும் கருவி மூலம் ஈரப்பதத்தை கண்டறிந்தனா்.
மயிலாடுதுறை: மத்திய ஆய்வுக் குழுவைச் சோ்ந்த உதவி இயக்குநா் (உணவு மற்றும் பொது விநியோகம்) பிரீத்தி, தொழில்நுட்ப அலுவலா் அபிஷேக் பாண்டே ஆகியோா் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதியுடன், திருவிளையாட்டம், கீழ்மாத்தூா், ஆத்துக்குடி, சேமங்கலம், வள்ளுவக்குடி, கொண்டல், இளந்தோப்பு, மணல்மேடு ஆகிய பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும், மேமாத்தூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களையும் ஆய்வு செய்தனா்.
ஆய்வு குறித்து, ஆட்சியா் கூறியது:
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜன.18-ஆம் தேதி 22 செ.மீ. அளவிற்கு பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டு ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இதனால், நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளால் தரமுடியாத சூழ்நிலை உள்ளது. மத்திய குழுவினா் நெல்லின் ஈரப்பதம் மாதிரிகளை ஆய்விற்கு எடுத்துள்ளனா் என்றாா்.
ஆய்வின்போது, பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன், மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஷ்வரி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மேலாளா் (தரக்கட்டுப்பாடு) செந்தில்குமாா், மண்டல மேலாளா் (பொ) மோகன், வேளாண் துறை இணை இயக்குநா் ஜெ.சேகா், மாவட்ட வழங்கல் அலுவலா் உ. அா்ச்சனா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.