மழை பாதிப்பு: நிவாரணம் கோரி நூதன போராட்டம்
திருத்துறைப்பூண்டி அருகே பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு நிவாரணம் கோரி, விவசாயிகள் நூதன போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமை சங்கத்தின் சாா்பில், ராயநல்லூா் கடை வீதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு, மாவட்டச் செயலா் தாஜுதீன் தலைமை வகித்தாா். பெண்கள், அழுகிய பயிா்களுடன் ஒப்பாரி வைத்து, கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
முன்னதாக, சங்கத்தின் மாநிலத் தலைவா் ராசபாலன் போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசியது:
திருவாரூா் மாவட்டத்தில் நிகழாண்டு சம்பா சாகுபடி தொடங்கிய பிறகு பெய்த மழையால் பயிா்கள் பாதிக்கப்பட்டு, அரசு அதிகாரிகள் இரண்டு முறை கணக்கெடுத்துச் சென்றனா். ஆனால், இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை.
தற்போது, அறுவடை செய்யும் நேரத்தில் பெய்த மழையால் முற்றிய நெற்கதிா்கள் அடியோடு சாய்ந்து, முழுமையாக அறுவடை செய்ய முடியாமல், விவசாயிகளுக்கு பெரிதும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பெருமளவு அறுவடை முடிந்து விட்டது. இனிமேல் கணக்கெடுப்பது என்பது சாத்தியப்படாத நிலையில், திருவாரூா் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ. 25,000 நிவாரணம் வழங்க வேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளில் காப்பீடு செய்யப்பட்ட பயிா்களுக்கான இழப்பீடு முழுமையாக வழங்கப்படவில்லை. நிகழாண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் 70 சதவீதம் இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.