பாஜக: 'மாநிலத் தலைவர் பதவி ரேஸ்' - விடாத அண்ணாமலை... முட்டி மோதும் சீனியர்கள்; கமலாலய பரபர!
பா.ஜ.க-வில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய அளவில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படும். பிறகு உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். இதன்படி கடந்த அக்டோபரில் தமிழக பா.ஜ.க-வில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது. ஒருகோடி பேரை உறுப்பினராகச் சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், அதில் பாதியைக் கூட எட்ட முடியவில்லை. நவம்பரில் தொடங்கிய உட்கட்சி தேர்தலிலும் ஏராள... தாராள சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பியிருக்கிறது. 'தேர்தல் முறையாக நடக்கவில்லை' எனக்கூறிப் பல இடங்களில் நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். இந்த களேபரங்களுக்கு மத்தியில் மாநிலத் தலைவர் பதவிக்கான ரேஸ் சூடுபிடித்திருக்கிறது. தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ள அண்ணாமலை தீவிரம் காட்டி வருகிறார். மறுபக்கம் நயினார் நாகேந்திரன், தமிழிசை, கே.டி.ராகவன், பொன்னார் என ஒரு கோஷ்டியே தலைவர் பதவிக்கு முட்டி மோதி வருகிறது. என்னதான் நடக்கிறது கமலாலயத்தில்?
இதுகுறித்து நம்மிடம் பேசிய கமலாலய சீனியர்கள், "மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் சீனியர்களை புறக்கணிக்கிறார். தனக்கு மட்டுமே விளம்பரம் தேடிக்கொள்கிறார் எனப் பல புகார்கள் டெல்லிக்குப் பறந்தது. இதையெல்லாம் தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் மூலமாகச் சரிக்கட்டி வந்தார், அண்ணாமலை. இந்தச் சூழலில்தான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க படுதோல்வியைச் சந்தித்தது. அப்போது, 'அண்ணாமலையின் சர்ச்சைக் கருத்துகளால்தான் தே.ஜ கூட்டணியிலிருந்து அ.தி.மு.க வெளியேறியது. இதுதான் தோல்விக்குக் காரணம்' என சீனியர்கள் பலரும் தேசிய தலைமைக்குப் புகார் அளித்தனர். மேலும் இந்த விவகாரத்தில் அண்ணாமலை, தமிழிசை இடையே நேரடியாகவே மோதல் வெடித்தது. இருவரையும் அமித் ஷா சமாதானம் செய்து வைத்தார். அப்போதிலிருந்து அண்ணாமலை மீது டெல்லி கடும் கோபத்தில் இருக்கிறது.
இந்த அதிருப்தியைப் பயன்படுத்தி நயினார், தமிழிசை, கே.டி.ஆர், பொன்னார் உள்ளிட்ட தலைவர்கள் மாநிலத் தலைவர் பதவிக்குத் தீவிரம் காட்டி வருகிறார்கள். சமீபத்தில் நட்டாவைச் சந்தித்த தமிழிசை, அந்தமான் நிகோபார் தீவுகளுக்கான மாநிலத் தலைவரைத் தேர்வு செய்யும் பொறுப்பை ஒப்படைத்ததற்கு நன்றி தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து பேசியவர், `சென்னை, கோவை, கன்னியாகுமரியில் அதிக உறுப்பினர்கள் இணைந்திருக்கிறார்கள். சிறுபான்மையினர் அதிகம் இருக்கும் இடங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அங்கெல்லாம் மத்திய அரசின் திட்டங்களைக் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். தி.மு.க மீது அதன் கூட்டணிக் கட்சிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றன. எனவே வலுவான கூட்டணி அமைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். இதற்கு தே.ஜ கூட்டணிக்கு அ.தி.மு.க, த.வெ.க, பா.ம.க போன்ற கட்சிகளையெல்லாம் கொண்டுவர வேண்டும்' எனத் தெரிவித்திருக்கிறார்.
இறுதியாக மாநிலத் தலைவர் பதவி மீதான தனக்கு இருக்கும் விருப்பத்தையும் சொல்லியிருக்கிறார். இதற்குப் பதிலளித்த நட்டா, `பா.ஜ.க-வில் உண்மையாக உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். அதனால்தான் உங்களுக்கு மாநிலத் தலைவர், கவர்னர் பதவிகளை வழங்கினோம். இந்தச் சூழலில் உங்களுக்கு என்ன பதவி வழங்க வேண்டும் என்பது அகில இந்தியத் தலைமைக்குத் தெரியும்' எனத் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அங்கிருந்து உற்சாகமாகப் புறப்பட்டவர், டெல்லியில் உள்ள சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடும் செய்திருக்கிறார். அடுத்ததாக அமித் ஷா மூலமாக நயினார் நாகேந்திரன் தீவிரமாக முயன்று வருகிறார். இவர் அ.தி.மு.க-வில் இரண்டு முறை எம்.எல்.ஏ-வாகவும், போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் இருந்தவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்த கட்சியில் ஏற்பட்ட குழப்பத்தால் அதிருப்தியடைந்தார். பிறகு பா.ஜ.க-வில் இணைந்தவருக்கு மாநிலத் தலைவர் பதவி கொடுப்பதாகத் தெரிவித்தார்கள். ஆனால் இதுவரை அவருக்கு அந்தப் பதவி கிடைக்கவில்லை. எனவே இந்தமுறை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என முட்டி மோதி வருகிறார். நாயனாருக்குப் பதவி கொடுப்பதன் மூலம் முக்குலத்தோரின் வாக்குகள் கிடைக்கும் என டெல்லி தலைமையும் யோசிக்கிறது.
தமிழ்நாடு பா.ஜ.க-வின் பொதுச்செயலாளராக இருந்தவர் கே.டி.ராகவன். இவர் பல ஆண்டுகளாகவே மாநிலத் தலைவர் பதவிக்கு முயற்சி செய்து வந்தார். அவருக்கென தனி ஆதரவாளர்கள் வட்டத்தையும் வைத்திருந்தார். மாநிலத் தலைவராக அண்ணாமலை பதவிக்கு வந்த பிறகு, வீடியோ சர்ச்சையில் ராகவன் சிக்கியதை அடுத்து தனது பதவியிலிருந்து வெளியேறினார். தற்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலமாகத் தலைவர் பதவிக்கு முயற்சிக்கிறார். சமீபத்தில், 'சாவர்கர், ஒரு கலகக்காரனின் கதை' என்கிற புத்தகம் வெளியிடப்பட்டது. கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு வெளியிட்ட இந்தப் புத்தகத்தின் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தவர், கே.டி.ஆர்தான். இதன் மூலமாகக் கட்சிக்குள் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். இதேபோல் நிதின் கட்கரி மூலமாகப் பொன்னார் முயன்று வருகிறார். இருப்பினும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குக் குறுகிய காலமே இருப்பதால் புதிய தலைவரை நியமிக்க டெல்லி தயங்குகிறது. எப்படியோ விரைவில் புதிய தலைவர் நியமிக்கப்பட்டு விடுவார். அதுவரை இந்த ஆடுபுலி ஆட்டம் தொடரும்" என்றனர்.