`விஜய் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவதை வரவேற்கிறோம்..!' - பெ.சண்முகம்
"கட்சியின் அரசியல் நிலைப்பாடு, சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து மதுரையில் நடைபெறும் அகில இந்திய மாநாட்டில் முடிவு செய்வோம்" என மதுரை வந்த சி.பி.எம் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்
நேதாஜியின் 129 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஜான்சி ராணி பூங்காவில் உள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் சண்முகம்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், "டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்து ஒன்றிய அரசு அரசாணையை வெளியிட வேண்டும். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எப்போதும் போல டங்ஸ்டன் விவகாரத்தில் பொய் பிரசாரம் செய்கிறார். கடந்த சில மாதங்களாக 11 கிராம மக்களும் இணைந்து தீவிரமான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். அவர்களோடு நாங்கள் எப்போதும் இருப்போம். இந்த பிரச்னை குறித்து நவம்பர் மாதம் மத்திய சுரங்கத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து ஏலத்தை ரத்து செய்ய மதுரை எம்.பி வெங்கடேசன் வலியுறுத்தினார்.
திருப்பரங்குன்றம் கோயிலுக்கும், அங்குள்ள தர்காவுக்கும் இரண்டு சமுதாய மக்களும் சென்று வருகிறார்கள். திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மதப் பிரச்னை வராத வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரந்தூர் போன்ற மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் விஜய் கவனம் செலுத்துவதை நாங்கள் வரவேற்கிறோம்.
பரந்தூரில் விவசாய நஞ்சை நிலங்களை அழித்து, ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை காலி செய்து விமான நிலையம் அமைக்க வேண்டுமா? 13 ஏரிகளை மூடினால் சென்னை உட்பட பல பகுதிகளில் பாதிப்பு ஏற்படும். அதனால், வேறு இடத்தில் விமான நிலையம் அமைக்கவேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு, சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து எப்ரல் 6 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் 24 வது அகில இந்திய மாநாட்டில் முடிவு செய்வோம்.
3 ஆண்டுகளுக்கு முன்னர் கேரளா கண்ணூரில் நடைபெற்ற 23 வது அகில இந்திய மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் தொடர்ந்து வருகிறோம்.
திமுக-வின் அனைத்து நடவடிக்கைகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கவில்லை, எதிர்க்க வேண்டியதை எதிர்க்கிறோம், வரவேற்க வேண்டியதை வரவேற்கிறோம்" என்றார்.