எடப்பாடி அருகே காதல் திருமணம் செய்த கடத்தப்பட்ட பெண் மீட்பு !
2,000 பேருக்கு இலவச மனைப்பட்டா வழங்க ஏற்பாடு: அமைச்சா் தகவல்
புதுச்சேரி, காரைக்காலில் அரசு சாா்பில் 2 ஆயிரம் பேருக்கு இலவச மனைப்பட்டா வழங்க ஏற்பாடு செய்துவருவதாக, ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் ஏ.கே. சாய் ஜெ. சரவணன் குமாா் தெரிவித்தாா்.
காரைக்கால் வடக்குத் தொகுதி பறவைப்பேட் பகுதியில் புதுச்சேரி ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, பாட்கோ மூலம் ரூ.1.96 கோடியில் கழிவுநீா் வடிகால் வசதியுடன் கூடிய தாா்ச்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், அமைச்சா்கள் ஏ.கே.சாய் ஜெ.சரவணகுமாா், பி.ஆா்.என். திருமுருகன் ஆகியோா் பங்கேற்று சாலைப் பணிகளை தொடங்கிவைத்தனா். பின்னா், அமைச்சா் ஏ.கே. சாய் ஜெ. சரவணகுமாா் செய்தியாளா்களிடம் கூறியது:
காரைக்கால் மாவட்டத்தில் ஆதிராவிடா் நலத்துறை மூலம் 20 பணிகளுக்காக ரூ.6.57 கோடி செலவிடப்பட்டு, பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது ரூ. 7 கோடி அளவில் 20 பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இன்னும் புதிதாக 11 பணிகள் நடைபெறவுள்ளன. காரைக்கால் மாவட்டத்தில் மூன்றரை ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களுக்காக ரூ.20 கோடி செலவிடப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரி, காரைக்காலில் கீழவெளி, பறவைப்பேட் பகுதிகளில் 30 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. 80 சதவீதம் ஆதிதிராவிடா் மக்களுக்கும், மீதமுள்ள 20 சதவீதம் ஏழை மக்களுக்கும் என 2 ஆயிரம் பேருக்கு இலவச மனைப்பட்டா 6 மாதங்களில் வழங்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இதற்காக ரூ.36 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றாா்.
சாலைப் பணிக்கான பூமிபூஜை நிகழ்வில், பாட்கோ செயற்பொறியாளா் பக்தவச்சலம், காரைக்கால் ஆதி திராவிடா் நலத்துறை உதவி இயக்குநா் (பொ) பொய்யாத மூா்த்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனா்.