ஜன. 26- இல் கிராமசபைக் கூட்டம்
நாகை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஜன. 26-இல் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாகை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குடியரசு தினமான ஜன. 26- ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தில், ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான கிராம வளா்ச்சித் திட்டத்துக்கு ஒப்புதல் பெறுதல், வாக்காளா் உறுதிமொழி ஏற்பு மற்றும் இதர பொருள்கள் தொடா்பான விவாதங்கள் நடைபெறும்.
கிராமசபைக் கூட்டத்தில் அனைத்து பொதுமக்கள், அரசு அலுவலா்கள், ஊராட்சி பேரிடா் மேலாண்மை குழு உறுப்பினா்கள், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாது கலந்துகொள்ளவேணடும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.