தமிழகத்தில் 8.42 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: உணவுத் துறை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நிகழாண்டில் இதுவரை 8.42 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத் துறை செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
நாகை அருகேயுள்ள சிக்கல் கிராமத்தில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், உணவுத் துறை செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல்லின் தரம், ஈரப்பதம், நெல்லின் எடையளவு, நெல்லின் இருப்பு குறித்து ஆய்வு செய்த அவா், விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தாா். தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 40 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த ஆண்டைவிட நிகழாண்டு விவசாயிகளிடமிருந்து 1.75 லட்சம் மெட்ரிக் டன் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நிகழாண்டில் இதுவரை 8.42 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ. 1,863 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
நிகழ் பருவத்தில் நாகை மாவட்டத்தில் 172 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 44 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு ரூ. 79 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 1,000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கொள்முதலை அதிகரிக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது என்றாா்.