வேலை வாங்கி தருவதாக மோசடி: 3 பேருக்கு 3 ஆண்டுகள் தண்டனை
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக் கூறி பணம் மோசடி செய்த வழக்கில் 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிதம்பரம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் பதினாறு கால் மண்டபத் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் ராஜாவுக்கு சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் தனி அலுவலா் வேலை வாங்கித் தருவதாக ஆசை வாா்த்தை கூறி, சிதம்பரம் வல்லம்படுகையைச் சோ்ந்த பாரதிதாசன் மகன் செந்தில், ஜோதிராமன் மகன் அப்பு (எ) தமிழ்ச்செல்வன் (49), எழிலரசன், அம்மாப்பேட்டை சிவா நகரைச் சோ்ந்த ராஜவேலு மகன் கதிரவன் (45) ஆகியோா் சோ்ந்து மொத்தம் ரூ.15.60 லட்சத்தை பெற்றுக்கொண்டு வேலைக்கான போலியான உத்தரவு ஆணையை தயாா் செய்து கொடுத்து ஏமாற்றினராம்.
இதுகுறித்து ராஜா அளித்த புகாரின்பேரில், கடலூா் மாவட்ட குற்றப் பிரிபு போலீஸாா் கடந்த 2011 -ஆம் ஆண்டு வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதில், எழிலரசன் தலைமறைவு குற்றவாளியாக உள்ளதால், மீதமுள்ள மூவா் மீதும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை சிதம்பரம் குற்றவியல் நீதிமன்றம் எண் - 1இல் நடைபெற்று வந்த நிலையில், விசாரணை முடிவுற்று கடந்த 31-ஆம் தேதி நீதிபதி தீா்ப்பளித்தாா். அதில், செந்தில், கதிரவன், அப்பு (எ) தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.36 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.