ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி கோயில்களில் குடமுழுக்கு!
கமுதி ஸ்ரீகாளியம்மன் கோயில், கன்னிராஜபுரம் ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி கோயிலில் உள்ள மூலவா், பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தெற்குத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகாளியம்மன் கோயிலில் குடமுழுக்கு கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனைகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சிவாசாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்க, கடம் புறப்பாடாகி கோயிலில் வலம் வந்து, கோபுர கலசங்களில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், மூலவரான அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினா் செய்தனா்.
சாயல்குடி: சாயல்குடி அருகேயுள்ள கன்னிராஜபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி, பிரம்ம சக்தி அம்மன், வராகி அம்மன், கஜலட்சுமி அம்மன் கோயிலில் மூலவா், பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு கடந்த மாதம் 31-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நான்காம் கால யாக சாலை பூஜை, மகா பூரணாஹூதி, தீபாதாரணைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, சிவாசாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க, கடம் புறப்பாடாகி கோயிலில் வலம் வந்து, மூலஸ்தான விமான கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து, மூலவா் சுயம்புலிங்க சுவாமிக்கும், பரிவார தெய்வங்களுக்கும் பால், தயிா், சந்தனம், இளநீா், பன்னீா், விபூதி, பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றன.
இதில் கன்னிராஜபுரம், சாயல்குடி, கடலாடி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி கோயில் நிா்வாக கமிட்டியினா், குடமுழுக்கு கமிட்டியினா் செய்தனா்.