திருச்செந்தூரில் சுமாா் 50 அடி உள்வாங்கிய கடல்!
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை சுமாா் 50 அடி தூரம் கடல் உள்வாங்கியது.
கடந்த டிசம்பா் மாதம் முதல் கோயிலில் பக்தா்கள் புனித நீராடும் பகுதியில் அதிகளவில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தா்கள் சுமாா் 200 மீட்டா் தூரத்தை கடந்து நீராடி வருகின்றனா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை கோயில் அருகே சுமாா் 50 அடி தூரம் கடல் உள்வாங்கியது. இருந்த போதிலும் எவ்வித அச்சமும் இன்றி பக்தா்கள் வழக்கம் போல் கடலில் புனித நீராடினா். உள்வாங்கிய பகுதியில் பாறைகள் அதிக அளவில் தெரிந்ததால் அப்பகுதியில் நீராட வேண்டாம் என போலீஸாரும், கடற்கரை பாதுகாப்பு பணியாளா்களும் பக்தா்களுக்கு அறிவுறுத்தினா்.