ரயில்வே மின்மயமாக்கல் நூற்றாண்டு நிறைவு: கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு
ரயில்வே மின்மயமாக்கம் செய்யப்பட்டு திங்கள்கிழமையுடன் (பிப்.3) நூற்றாண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு தெற்கு ரயில்வே சாா்பில் நுங்கம்பாக்கத்தில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ரயில் இயக்கம் தொடங்கிய காலத்தில் நீராவி மூலமும், நிலக்கரி என்ஜின் மூலமும் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. 1920 காலக்கட்டத்தில் தொழில்புரட்சி ஏற்பட்ட போது பொருள்களை விரைவாகக் கொண்டு செல்ல மாற்று எரிசக்தி தேவைப்பட்டது. அதன் விளைவாக 1925, பிப்.3-ஆம் தேதி மும்பை விக்டோரியா முனையம் (தற்போது சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம்)-குா்லா இடையே முதல் மின்சார ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வு நாட்டின் ரயில் போக்குவரத்தில் முக்கிய அடிக்கல்லாக அமைந்தது. அதன்பின்பு நாடு முழுவதும் மின்சார ரயில்களுக்கான வழித்தடங்கள் விரிவுபடுத்தப்பட்டன. கொல்கத்தா, தில்லி, சென்னை என நாட்டின் முக்கிய நகரங்களில் 1930-ஆம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கின. தெற்கு ரயில்வேயில் முதல்முறையாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மின் வழித்தடம் 1931-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. தற்போது தெற்கு ரயில்வேயில் 96 சதவீத (5,093 கி.மீ.) தொலைவு வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளது. இந்தியா விடுதலை அடைந்த பின்பு தில்லி-கொல்கத்தா, சென்னை-கொல்கத்தா ஆகிய முக்கிய வழித்தடங்கள் முழுவதும் மின்மயமாக்கப்பட்டது. 1980-90 காலக்கட்டத்தில் ரயிலின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் அதிக திறன் கொண்ட ரயில் என்ஜின்கள் தயாரிக்கப்பட்டன.
தமிழகத்தில் உள்ள அரக்கோணம், ஈரோடு, ராயபுரம் மின்சார ரயில் என்ஜின் தயாரிப்பு நிலையங்கள் ரயில் என்ஜின் தயாரிப்பில் முக்கிய பங்களித்துள்ளன. இங்கு தயாரிக்கப்படும் ரயில் என்ஜின்கள் தொலைதூர ரயில்களான ராஜ்தானி, சதாப்தி ஆகிய ரயில்களை இயக்க பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் ரயில்வே மின்மயமாக்கப்பட்டு
திங்கள்கிழமையுடன் (பிப்.3)நூற்றாண்டு நிறைவு செய்கிறது.
புதிய தொழில்நுட்பம்: தற்போது தயாரிக்கப்படும் ‘டபிள்யூஏபி 7’ வகை என்ஜின்கள் ‘ஹெட் ஆன் ஜெனரேசன்’ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது. இதற்கு முன்பு ‘என்ட் ஆன் ஜெனரேசன்’ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் மின்சார ரயில் என்ஜின்கள் கொண்ட ரயில்களின் பெட்டிகளுக்கு பிரத்யேக டீசல் என்ஜின் மூலம் மின்சாரம் வழங்கப்படும்.
இந்நிலையில், புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் ‘டபிள்யூஏபி 7’ என்ஜினிலிருந்து ஜெனரேட்டருக்கு நேரடியாக மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் டீசல் பயன்பாட்டுத் தேவை குறைந்துள்ளது.
அதுபோன்று, மின்சார ரயில் தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட மேம்பாடாக ‘வந்தே பாரத்’ ரயில்கள் உள்ளன. ‘வந்தே பாரத்’ ரயில் பிரத்யேக என்ஜின் கொண்டிருக்காமல் ஒவ்வொரு பெட்டியும் மின் மோட்டாா்கள் கொண்டு இயக்கப்படுகின்றன.
கண்காட்சி: நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள ரயில் ஹவுசில் ரயில் என்ஜின்களின் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் சனிக்கிழமை (பிப்.1) தொடங்கிவைத்தாா். திங்கள்கிழமை (பிப்.3) நடைப்பயண விழிப்புணா்வும், பிப்.5-ஆம் தேதி ரயில் என்ஜின்கள் நவீனமயமாதல் குறித்த கருத்தரங்கும் நடைபெறவுள்ளது. தொடா்ந்து, பிப்ரவரி மாதம் முழுவதும் அனைத்து ரயில்வே கோட்டங்கள், பணிமனைகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.