ICC U19: `என்னுடைய அப்பா எடுத்த அந்த முடிவுதான் நான் இங்கே நிற்க காரணம்' -தமிழக...
ராணிப்பேட்டை: காவல் நிலையம் மீதே பெட்ரோல் குண்டு வீச்சு - அதிர்ச்சி கொடுத்த முகமூடி ஆசாமிகள்
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிப்காட் காவல் நிலையத்தின் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன.
நள்ளிரவு 12 மணியளவில், முகமூடி அணிந்து பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றனர். காவல் நிலையத்தின் இரும்பு கேட் பூட்டப்பட்டிருந்ததால், அதன் மீதே குண்டுகள் விழுந்தன. இதனால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
இது குறித்து தகவலறிந்ததும் எஸ்.பி விவேகானந்த சுக்லா விரைந்து வந்து காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பெட்ரோல் குண்டு வீசியவர்களை விரைந்து பிடிக்கவும் 2 தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டிருக்கிறார் எஸ்.பி விவேகானந்த சுக்லா.
இந்தச் சம்பவம் தொடர்பாக, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேகத்துக்குரிய 10-க்கும் மேற்பட்டோரை பிடித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக, ரவுடி தமிழரசன் என்பவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அவனது ஆட்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சிப்காட் அருகிலுள்ள அவரக்கரையைச் சேர்ந்த ஐ.டி.ஐ பயிலும் இளைஞன் ஒருவரையும் பிடித்து விசாரணைக்கு உட்படுத்தியிருக்கின்றனர். இளைஞனை விடுவிக்கக்கோரி அவரது பெற்றோர் காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால், சிப்காட் காவல் நிலைய பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது. காவல் நிலையம் மீதே பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம், பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.