கும்பமேளா விவகாரம்: மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு!
மகா கும்பமேளா விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளி நடப்பு செய்தனர்.
மகா கும்பமேளா நெரிசலில் பலி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். திமுக, காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் இன்றைய அவை நடவடிக்கைக்கு 267 விதியின் கீழ் 9 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மகா கும்பமேளா விவகாரம் உள்பட மனுக்களில் குறிப்பிட்டுள்ள பிரச்னைகள் குறித்து இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கத்துக்கு இடையே அவை நடவடிக்கை!
ஆனால், மகா கும்பமேளா விவகாரத்தை உடனே விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து திமுக, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜவாதி, ஆம் ஆத்மி, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
அதேபோல், மகா கும்பமேளா விவகாரங்கள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் மக்களவையில் தொடர்ந்து முழக்கம் எழுப்பி வரும் நிலையில் அவை நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.