``SC, ST மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.48.95 கோடி கல்விக்கடன் தள்ளுபடி" -தமிழ்நாட...
Kalpana Nayak:``பெண் ஏ.டி.ஜி.பி உயிருக்கே பாதுகாப்பு இல்லையா?" - திமுக அரசை சாடும் எதிர்க்கட்சிகள்
தமிழ்நாடு ஏ.டி.ஜி.பி அதிகாரி கல்பனா நாயக், கடந்த ஆண்டு ஜூலையில் எழும்பூரில் தனது அலுவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து தன்னை கொல்லும் முயற்சியில் நடத்தப்பட்ட சம்பவம் என்றும், புகாரளித்து 6 மாதங்களுக்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென்றும் ஊடக நேர்காணலில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், தி.மு.க அரசில் முதல்வர் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையில் பெண் ஏ.டி.ஜி.பி அதிகாரியின் உயிருக்கே பாதுகாப்பு இல்லையா என அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. என்னதான் நடக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சியில்? ஒரு ஏ.டி.ஜி.பி, தன்னை கொலை செய்யும் நோக்கில் தன் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டதாக சொல்வதும், காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுவதும் தான் சட்டம் ஒழுங்கு காக்கப்படும் ஆட்சியா?
நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாமல், இப்படி ஒரு தறிகெட்ட ஆட்சி நடத்திவிட்டு, "சட்டம் ஒழுங்கை சிறப்பாக தான் நடத்தி வருகிறேன்" என்று வாய் கூசாமல் பச்சைப்பொய் பேச வெட்கமாக இல்லையா? "காவல் நிலையம் கூட பாதுகாப்பான இடம் இல்லை" என்ற நிலைக்கு சட்டம் ஒழுங்கைப் படுபாதாளத்திற்கு தள்ளிவிட்ட ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களைக் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஸ்டாலின் மாடல் தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்." என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ``தமிழ்நாட்டில் காவல்துறை உதவியாளர்களை தேர்வு செய்வதில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக தமது அலுவலகத்தில் தீ விபத்தை ஏற்படுத்தி தம்மை படுகொலை செய்ய சதி நடந்ததாக கல்பனா நாயக் குற்றஞ்சாட்டியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வில் இட ஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்று ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், காவல்துறை ஏ.டி.ஜி.பி ஒருவரே முறைகேடு நடந்ததாக கூறியிருப்பது ஐயத்தை அதிகரித்திருக்கிறது. தமிழ்நாடு காவல்துறைக்கு 621 உதவி ஆய்வாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் அடிப்படையில் நடத்தப்பட்ட தேர்வில் இட ஒதுக்கீடு முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. அது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இட ஒதுக்கீட்டை கடைபிடிப்பதில் நிகழ்ந்த குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்று ஆணையிட்டது. அதன்படி பழைய பட்டியலில் இருந்து 41 பேரை நீக்கி விட்டு, புதிதாக 41 பேர் சேர்க்கப்பட்டதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.
ஆனால், அதிலும் குளறுபடிகள் இருப்பதால், புதிய பட்டியலை நவம்பர் 18-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த அக்டோபர் 28-ஆம் நாள் ஆணையிட்டது. ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் தான், காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் பிற பணிகளுக்கான நியமனங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்றுவதில் நடந்த முறைகேடுகள் குறித்து விரிவான அறிக்கையை தாம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தயாரித்து அளித்ததாகவும், அது கண்டுகொள்ளப்படவில்லை என்றும் காவல்துறை கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் குற்றஞ்சாட்டியுள்ளார்.தம்மை படுகொலை செய்யும் நோக்கத்துடன் தமது அலுவலகத்தில் தீ விபத்து ஏற்படுத்தப்பட்டதற்கு அடுத்த நாளே, திருத்தப்பட்ட பட்டியல் தமது ஒப்புதல் பெறாமல் வெளியிடப்பட்டதாகவும் அந்த புகாரில் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தம்மை படுகொலை செய்ய நடந்த சதி குறித்து காவல்துறை தலைமை இயக்குநரிடம் புகார் கொடுத்து 6 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளார். அவரது குற்றச்சாட்டுகளை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாததற்கும், சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளராக இருந்த கல்பனா நாயக் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகளுக்கும் தொடர்பு இருப்பதாகவே தோன்றுகிறது.
இந்த விவகாரத்தில் உண்மை என்ன? என்பது மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டியதும், காவல் உதவி ஆய்வாளர்கள் நியமனத்தில் சமூகநீதி நிலைநாட்டப்படுவதும் அவசியமாகும். அதேபோல், காவல் உதவி ஆய்வாளர் நியமனத்தில் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக கல்பனா நாயக்கை படுகொலை செய்யும் நோக்குடன் அவரது அலுவலகத்தில் தீ விபத்து ஏற்படுத்தப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டியது உடனடித் தேவையாகும்.
எனவே, உதவி ஆய்வாளர்கள் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க அரசு ஆணையிட வேண்டும். பெண் ஏ.டி.ஜி.பி கல்பனா நாயக்கை படுகொலை செய்ய சதி நடந்ததாக கூறப்படுவது குறித்து சிபிஐ விசாரணைக்கும் தமிழக அரசு ஆணையிட வேண்டும்." என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
மேலும், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, ``விதிமீறலும், சட்ட மீறலும், தி.மு.க அரசின் கீழ் தமிழகத்தில் வழக்கமாகிவிட்டது. இந்த அரசு செயல்படும் பரிதாப நிலை குறித்துப் பேசும் காவல்துறை உயர் அதிகாரிகள் கூட, இதில் இருந்து தப்பிக்க முடியவில்லை. காவல்துறை துணை ஆய்வாளர்கள் நியமனத்தில், தற்போதைய மற்றும் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகளை, ஏ.டி.ஜி.பி கல்பனா நாயக் அவர்கள் சுட்டிக்காட்டியதற்குப் பரிசாக, அவரது அலுவலகம் எரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தீ விபத்து நடந்தபோது அவர் அலுவலகத்தில் இருந்திருந்தால், அவர் உயிரையும் இழந்திருக்க நேர்ந்திருக்கும்.
இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், இந்தச் சம்பவத்தில் உண்மையான விசாரணை நடத்த வேண்டும் என்ற அவரது தொடர்ச்சியான வேண்டுகோளை தமிழகக் காவல்துறை புறக்கணித்ததாகத் தெரிகிறது. ஏன் காவல்துறை உயர் அதிகாரிகள் இதை மின்சாரப் பழுது காரணமாக ஏற்பட்ட தீ விபத்து என்று கூறி மறைக்க முயன்றாலும், தீ விபத்துக்கு முந்தைய நிகழ்வுகள், காவல்துறையின் இந்தக் கூற்றை நம்பமுடியாததாக ஆக்குகிறது. ஏனெனில், ஏ.டி.ஜி.பி கல்பனா நாயக், முடிவெடுக்கும் பொறுப்பில் இருந்து விலக்கி வைக்கப்பட்டதோடு, துணை ஆய்வாளர்களின் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிடுவதற்கு முன்பு அவரது ஒப்புதலும் பெறப்படவில்லை.
தமிழ்நாட்டில் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக, சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கொல்லப்படுகிறார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் கூட, தமிழகத்தில் பாதுகாப்பாக உணரவில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலினின் இரும்புக்கரம், நீதியை நிலைநிறுத்துவதற்குப் பதிலாக, உண்மையை மௌனமாக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாகத் தெரிகிறது." என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs