அரசியலைக் கடந்து திருப்பணிகள் செய்கிறோம்! -முதல்வர் மு.க.ஸ்டாலின்
காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்: இளைஞனை சுட்டுப்பிடித்த ராணிப்பேட்டை போலீஸ்!
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிப்காட் காவல் நிலையத்தின் மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
நள்ளிரவு 12 மணியளவில், முகமூடி அணிந்து பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். காவல் நிலையத்தின் இரும்பு கேட் பூட்டப்பட்டிருந்ததால், அதன் மீதே குண்டுகள் விழுந்தன. இதனால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டுகளை வீசிய நபர்களை பிடிக்க 7 தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டிருந்தார் எஸ்.பி விவேகானந்த சுக்லா.
இந்த நிலையில், சிப்காட் பகுதியைச் சேர்ந்த பரத், விஷால், ஹரி ஆகிய 3 இளைஞர்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை தேடி சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையிலான டீம் விரைந்தது.
சென்னையில் பதுங்கியிருந்த 3 பேரையும் சுற்றிவளைத்து போலீஸார் கைதுசெய்தனர். அப்போது, ஹரி மறைத்துவைத்திருந்த கத்தியால் போலீஸாரை தாக்கிவிட்டு தப்பிஓட முயன்றிருக்கிறார். இதில் எஸ்.ஐ ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, தற்காப்புக்காக போலீஸார் ஹரியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்திருக்கின்றனர். இதில் ஹரிக்கு கால் முட்டியில் குண்டு பாய்ந்தது. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஹரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் என்ன நோக்கத்திற்காக காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள் என விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. சுட்டுப் பிடிக்கப்பட்ட இளைஞன் ஹரி, சிப்காட் பகுதியைச் சேர்ந்த ரவுடி தமிழரசனின் மகன் எனவும் தெரியவந்திருக்கிறது.