வெள்ளக்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: வெளிமாநில தொழிலாளி கைது
அபிஷேக் சர்மா இன்னும் அதிகமாக பந்துவீச வேண்டும்; முன்னாள் இந்திய வீரர் வலியுறுத்தல்!
அபிஷேக் சர்மா இன்னும் அதிகமான ஓவர்கள் பந்துவீச வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (பிப்ரவரி 2) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் நிறைவு செய்தது.
இதையும் படிக்க: டி20 போட்டிகளில் அதிக ரிஸ்க் எடுத்து விளையாட விரும்புகிறோம்: கௌதம் கம்பீர்
நேற்றையப் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அவர் 54 பந்துகளில் 135 ரன்கள் (7 பவுண்டரிகள், 13 சிக்ஸர்கள்) எடுத்தார். இதன் மூலம், டி20 போட்டி ஒன்றில் அதிகபட்ச ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். அதேபோல, டி20 போட்டி ஒன்றில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
ஹர்பஜன் சிங் வலியுறுத்தல்
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியின் மிகப் பெரிய வெற்றிக்கு அபிஷேக் சர்மா உதவிய நிலையில், அவர் இன்னும் அதிகமான ஓவர்கள் பந்துவீச வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: அபிஷேக் சர்மா இன்னும் அதிகமான ஓவர்கள் வீச வேண்டும் என நினைக்கிறேன். அவர் மிகச் சிறந்த பந்துவீச்சாளர். அபிஷேக் சர்மாவின் ஆரம்பாக கால கிரிக்கெட் பயணத்தில் அவரை பார்த்திருக்கிறேன். அவரது பந்துவீச்சு அருமையாக இருக்கும். இருப்பினும், அவர் பேட்டிங்குக்கு எடுக்கும் முயற்சியைக் காட்டிலும் பந்துவீச்சுக்கு அதிக முயற்சி எடுப்பதில்லை.
இதையும் படிக்க: சஞ்சு சாம்சனுக்கு காயம்; மீண்டும் அணியில் இடம்பெறுவாரா?
அபிஷேக் சர்மா ஒவ்வொரு முறை என்னை சந்திக்கும்போதும், அவரது பந்துவீச்சு திறன் குறித்து நான் பேசியிருக்கிறேன். அவரது பந்துவீச்சு திறமை குறித்து இன்னும் பேசப்பட வேண்டும். பேட்டிங் அவரது முதல் காதல். அதில், அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவார். ஆனால், பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுவதற்கு அவர் இன்னும் நிறைய உழைக்க வேண்டும். ஒரு சிறந்த இடது கை சுழற்பந்துவீச்சாளருக்கு உள்ள அனைத்து திறன்களும் அவரிடம் உள்ளது என்றார்.
நேற்றையப் போட்டியில் ஒரு ஓவர் வீசிய அபிஷேக் சர்மா 3 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.