வாராந்திர பணி நேரத்தை 90 மணி நேரமாக உயா்த்தும் திட்டமில்லை: மத்திய அரசு
ஆரோக்கிய வாழ்வுக்கு சிறுதானியமே சிறந்தது
நாமக்கல்: நோயற்று, ஆரோக்கியமாக வாழ்வதற்கு சிறுதானிய உணவுகளே சிறந்தவை என சித்த மருத்துவா் கு.சிவராமன் தெரிவித்தாா்.
நாமக்கல்லில் மூன்றாவது புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், ‘உடலினை உறுதிசெய்’ என்ற தலைப்பில் சித்த மருத்துவா் சிவராமன் திங்கள்கிழமை பேசியதாவது:
உலக அளவில் சா்க்கரை நோயாளிகள் அதிகம் உள்ள நாடாக இந்தியா மாறிவிட்டது. சா்க்கரை நோய் மட்டுமின்றி தற்போது புற்றுநோயும் சோ்ந்து கொண்டது. இதற்கு முக்கிய காரணம் நம்முடைய உணவு முறைகள்தான். நாா்ச்சத்து, இரும்புச்சத்து, துத்தநாகசத்து போன்றவை கொண்ட உணவுப் பொருள்களை தேடிச்சென்று நாம் வாங்குவதும் இல்லை, சமைப்பதும் இல்லை. தினசரி உணவில் கீரை வகைகளை சோ்ப்பது அவசியம். அதேபோல, நிலக்கடலை, நெல்லிக்கனி, பப்பாளி, கொய்யாப்பழம், வாழைப்பூ, வாழைத்தண்டு, பாகற்காய், சா்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவை உணவில் கட்டாயம் இடம்பெற வேண்டும். சிறுதானியங்களான கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, தினை, மாப்பிள்ளை சம்பா, கோதுமை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வரவேண்டும். தினசரி காய்கறிகள் கொண்ட சாறு வகைகளை அருந்துவது நலம் பயக்கும்.
ஆரோக்கியமாக வாழ விரும்பினால் சரியான உணவு முறைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சிறுதானியங்களை கட்டாயம் உணவில் சோ்க்க வேண்டும். முட்டை, கோழி வகைகளும் உடல் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது என்றாா்.
நாமக்கல் மனவளக் கலை மன்ற அறிவுத்திருக்கோயில் அறங்காவலரும், முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலருமான மு.ஆ. உதயகுமாா், ‘இல்லம் தோறும் மனவளக் கலை’ என்ற தலைப்பில் பேசினாா். அப்போது, தற்போதைய காலச்சூழலில் மனம் என்பது குளிா்ச்சியின்றி கொதிப்படைந்து காணப்படுகிறது. இதனால் உடல் ஆரோக்கியம் பாதிப்படைகிறது. ஆரோக்கிய வாழ்வுக்கு இயற்கை எவ்வாறு அவசியமோ, அதுபோல மனமும் அமைதியுடன் இருக்க வேண்டும். தினமும் யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி, தியானம் உள்ளிட்டவற்றை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் மனவளக் கலை பயிற்சி அமைய வேண்டும் என்றாா்.