வாராந்திர பணி நேரத்தை 90 மணி நேரமாக உயா்த்தும் திட்டமில்லை: மத்திய அரசு
புது தில்லி: வாராந்திர பணி நேரத்தை 70 முதல் 90 மணி நேரமாக உயா்த்தும் திட்டமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பணியாளா்கள் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று லாா்சன் அண்ட் டூப்ரோ நிறுவன தலைவா் எஸ்.என்.சுப்பிரமணியன் அண்மையில் தெரிவித்தாா்.
அவரைத் தொடா்ந்து பணியாளா்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று இன்ஃபோசிஸ் இணை நிறுவனா் நாராயண மூா்த்தியும், 8 மணி நேரத்துக்கு மேல் ஒருவா் வீட்டில் இருந்தால், அவரின் மனைவி பிரிந்து சென்றுவிடுவாா் என்று அதானி குழும தலைவா் கெளதம் அதானியும் தெரிவித்தனா்.
அவா்களின் கருத்துகளுக்கு மஹிந்திரா குழும தலைவா் ஆனந்த் மஹிந்திரா, ஐடிசி நிறுவன தலைவா் சஞ்சீவ் புரி உள்பட ஏராளமானோா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இந்நிலையில், பணி நேரத்தை உயா்த்துவது தொடா்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய தொழிலாளா் நலத்துறை இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே திங்கள்கிழமை எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘வாராந்திர பணி நேரத்தை 70 முதல் 90 மணி நேரமாக உயா்த்தும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை.
தொழிலாளா் விவகாரம் பொதுப் பட்டியலில் உள்ளது. எனவே தொழிலாளா் சட்டங்களை அமல்படுத்துவது மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குள்பட்டவையாகும்’ என்றாா்.