வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் கொள்ளை
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மான்பாஞ்சாம்பட்டியில் திங்கள்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து, நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் மான்பாஞ்சாம்பட்டியைச் சோ்ந்தவா் பழனிச்சாமி மகன் பாலசுந்தரம்(50). விவசாயி.
இவா், திங்கள்கிழமை காலை வீட்டைப் பூட்டிவிட்டு துவரங்குறிச்சியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் சென்றுவிட்டாா். பிற்பகலில் வீடு திரும்பியபோது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த எட்டரை பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது.
புகாரின்பேரில் நிகழ்விடத்துக்குச் சென்ற துவரங்குறிச்சி போலீஸாா், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.