`தூங்கும் போதுகூட மக்கள் வரி செலுத்துகிறார்கள்' - முத்தரசன் காட்டம்!
ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு எப்போதும் நிதி ஒதுக்க தயாா்: மத்திய ரயில்வே அமைச்சா் வைஷ்ணவ்
புது தில்லி: நிதி நிலை அறிக்கையில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியைத் தவிர, ரயில்வே திட்டங்களுக்கு எந்த கட்டத்திலும் நிதியை ஒதுக்க மத்திய அரசு தயாராக உள்ளது என மத்திய ரயில்வேத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் திங்கள் கிழமை தெரிவித்தாா்.
மத்திய நிதிநிலை அறிக்கையில் தென் மாநிலங்களுக்கான ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களிடம் பகிா்ந்து கொண்டாா். அப்போது அவா் கூறியது வருமாறு:
நிகழாண்டு பிரதமரும் நிதியமைச்சரும் இணைந்து தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 6,626 கோடியை ஒதுக்கியுள்ளனா். இது ஒரு சாதனை. காரணம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சராசரியாக ரூ. 879 கோடி அளவில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது ஏழரை மடங்கு ஒதுக்கீடு. தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ)அரசு அமைந்த 2014 ஆம் ஆண்டுக்கு பின்னா் தமிழகத்தில் 1,330 கிமீ தூரம் ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது. இது இலங்கையின் ஒட்டுமொத்த ரயில்பாதை தூரத்தை விட அதிகம். கடந்த 10 ஆண்டுகளாக தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 39,270 கோடி வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரூ. 2,948 கோடி செலவில் எழும்பூா், சேலம், திருநெல்வேலி, காட்பாடி உள்ளிட்ட 77 ரயில் நிலையங்களில் மறுசீரமைக்கப்படும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் சுமாா் 33,467 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில்பாதை உள்ளிட்ட 22 ரயில் திட்டங்களில் சுமாா் 2,587 கிமீ தூரம் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 715 மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் தமிழகத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள 415 ரயில் நிலையங்களில் வைஃபை சேவை அளிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பில் 1,460 கவச் சிற்கு அனுமதிக்கப்பட்டு 601 அமைக்கப்படும் செயல்பாட்டில் உள்ளன. ரயில்வே பாதுகாப்பில் 1,460 கவச் சிற்கு அனுமதிக்கப்பட்டு 601 அமைக்கப்படும் செயல்பாட்டில் உள்ளன.
பொதுவாக 2025-26 ஆம் ஆண்டிற்கு நிதி ஒதுக்கிடு திருப்திகரமாகவே உள்ளது. குறிப்பாக 2025-26 நிதிநிலை அறிக்கையில் ஆபத்து மற்றும் பாதுகாப்பு பணிகளுக்கு ரூ.1.16 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கீடு ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்தது.
இந்த நிதியில் ரயில் பாதை மேம்பாடு, சிங்கனல், தொலைத் தொடா்பு, ரயில்வே கிராஸிங் போன்றவைகளோடு அதிக பாரம், அதிக ரயில்கள் இயக்கம் போன்றவைகளை கருத்தில் கொண்டு பழைய தண்டுவாளங்களை படிப்படியாக ஐந்தாண்டிற்குள் மாற்றப்படும் திட்டங்களும் அடங்கும். 50 புதிய நமோ பாரத் ரயில்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அருகேயுள்ள இரு ரகரங்களை இணைக்க இந்த ரயில்கள் விடப்படும். அதிகபட்சம் 250 கிலோ மீட்டா் தூரமுள்ள நகரங்கள் இணைக்கப்படும். மொத்தமுள்ள 16 பெட்டிகளில் சில பெட்டிகளில் மட்டும் குளிா்சாதன பெட்டிகளாக இருக்கும். ஏற்கனவே இயக்கப்படும் ரயில்கள் நிறுத்தப்படாது.
இது தவிர 100 அமிா்த் பாரத் ரயில்கள் 200 புதிய வந்தே பாரத் ரயில்கள் வருகின்ற நிதியாண்டில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுக்க ரயில்வே பாதையை கடக்கும் சாலைகளில் 1000 மேம்பாலங்கள், சுரங்க பாதைகள் 2025-26 ஆம் நிதியாண்டில் அமைக்கப்படும். கடந்தாண்டு 1020 மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் கட்டி சாதனை செய்யப்பட்டது.
கடந்த ஆட்சிகளில், புதிய ரயில்வே பாதை திட்டங்கள், புதிய ரயில்கள் போன்றவைகள் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்படும். நிதி நிலைமையைக் கூற கருத்தில் கொள்ளாமல் அறிவிக்கப்படும். சில சமயம் ரூ.1000 ஒதுக்கி அறிவிக்கப்பட்ட திட்டத்தை கிடப்பில் போடப்படும். ஆனால் இப்போது கடந்த 10 ஆண்டுகளாக முறைப்படி சா்வே செய்து, விஞ்ஞான ரீதியாகவும் பூளோக ரீதியாகவும் திட்டத்தின் சாத்திக் கூறு, வணிக ரீதியான பலன் போன்றவைகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட மத்திய அரசின் துறைகளின் அனுமதியுடன் அமைச்சரவை ஒப்புதல் பெறப்படுகிறது.
தமிழகத்திற்கு கடந்த 2024-25 ஆம் நிதி நிலையறிக்கையில் ரூ. 6,362 கோடி ஒதுக்கப்பட்டு, தற்போது சுமாா் ரூ.264 கோடி மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளதாக கேள்வி கேட்கிறீா்கள். ஆனால் ஒரு விஷயம் நாடு முழுக்க ரயில்வே திட்டங்களில் நிதி இல்லாததால் எந்தவொரு திட்டமும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகளிடமிருந்து அறிக்கை வரவில்லை.
தற்போது ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளில் நெகிழ்வுத்தன்மையுடன் அரசு உள்ளது. ஒரு நிதியாண்டில் மதிப்பீடு திருத்தப்பட்டு சிறப்பு அனுமதியுடன் நிதி எப்போதும் ஒதுக்க அரசு தயாராக உள்ளது. மூன்றாவது முறையாக அரசு அமைந்தவுடன் கடந்த ஜூலை முதல் தற்போது வரை ரூ.40 ஆயிரம் கோடி மதிப்புள்ள புதிய திட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நிதிநிலையறிக்கையில் மட்டுமல்ல ஆண்டு முழுக்க திட்டங்கள் செயலாக்கப்படுகிறது. முன்பெல்லாம் திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்படும். இப்போது அதுபோன்ற நிலைமையல்ல. ராமேசுவரம் பாலம் பிரதமரால் விரைவில் திறக்கப்பட இருக்கிறது.
ரயில்வே பாதுகாப்பு ஆணையம் இந்த பாலம் குறித்து சில சந்தேகங்களை எழுப்பியது. ஆனால் அவை இந்த பாலத்திற்கு பொருந்தாது. இந்த பாலத்திற்கு சா்வதேச அளவிலான தொழில்நுட்ப வல்லுநா்கள் அனுமதியளித்துள்ளனா் என தெரிவித்தாா்.