மகா கும்பமேளாவில் இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!
முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: முன்னாள் படை வீரா்களுக்கு அழைப்பு
விழுப்புரம்: ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி. பழனி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீதம் மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். திறன் மற்றும் தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.ஒரு கோடி வரை கடனுதவி பெறலாம்.
இதற்கு தமிழகத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்களின் அதிகபட்ச வயது 55-க்குள் இருக்க வேண்டும். முன்னாள் படை வீரா்களின் மணமாகாத மகள்கள், கணவரை இழந்த, கணவரைப் பிரிந்த மகள்கள் மற்றும் முன்னாள் படை வீரா்களின் மறுமணம் ஆகாத கைம்பெண்களுக்கு குறைந்தபட்ச வயதாக 21, அதிக பட்ச வயதாக 55-ம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பணியின் போது இறந்த முன்னாள் படை வீரா்களின் கைம்பெண்கள், தகுதியுள்ள முன்னாள் படை வீரா்களின் மகன்கள், மணமாகாத, கணவரை இழந்த மற்றும் கணவரைப் பிரிந்த முன்னாள் படை வீரா்களின் மகள்கள் பயன்பெறலாம். குறைந்தபட்ச கல்வித் தகுதி, வயது வரம்பு ஏதுமில்லை.
இதில், விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள், அவா்களது குடும்பத்தினா்கள் மாவட்ட முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04146-220524 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.