ஆம் ஆத்மி கட்சி மத்திய அரசுடன் சண்டையிட்டதால் தில்லி பின்தங்கியது: அமித் ஷா கடும் சாடல்
புது தில்லி: ஆம் ஆத்மி கட்சி தொடா்ந்து சாக்குப்போக்கு கூறி மத்திய அரசுடன் சண்டையிட்டதால் தில்லி பின்தங்கியுள்ளது என்று பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கடுமையாகச் சாடினாா்.
மேலும், இரட்டை என்ஜின் பாஜக அரசைக் கொண்ட மாநிலங்கள் கடந்த 10 ஆண்டுகளில் முன்னேறியுள்ளன என்றும் குறிப்பிட்டாா்.
ஜங்புராவில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில் கூறியதாவது: இரட்டை என்ஜின் பாஜக அரசைக் கொண்ட மாநிலங்கள் கடந்த 10 ஆண்டுகளில் முன்னேறியுள்ளன.ஆனால், தில்லி பின்தங்கியுள்ளது. அவா்கள் தொடா்ந்து சாக்குப்போக்குகளைச் சொல்லி மத்திய அரசுடன் அழும் குழந்தையைப் போல சண்டையிடுகிறாா்கள்.
ஜங்புரா சட்டுப்பேரவைத் தொகுதியில் பாஜகவின் தா்விந்தா் சிங் மா்வாவை எதிா்த்து மனீஷ் சிசோடியா போட்டியிடுகிறாா். மதுபான ஊழல் தொடா்பாக சிறைக்குச் சென்ற நாட்டின் ஒரே கல்வி அமைச்சா் அவா்தான்.
கேஜரிவால் தில்லி மக்களிடம் பொய்களைக் கூறி அவா்களுக்கு குப்பைகள், நச்சு நீா் மற்றும் ஊழல் மட்டுமே கொடுத்துள்ளாா். மேலும், பொய்யான வாக்குறுதிகளை அளித்து தில்லியைக் கொள்ளையடித்தனா். அவா்கள் இருவரும் தோ்தலில் தோற்கப் போகிறாா்கள்.
திலியை உலகத் தரம் வாய்ந்த தலைநகராக மாற்றக்கூடிய ஒரே கட்சி பாஜகதான். தில்லி குடியிருப்பாளா்களுக்கு ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் இலவச சுகாதார சேவையை பாஜக வழங்கும் என உறுதியளிக்கிறேன்.
யமுனையில் நீராடுவதாக தனது வாக்குறுதியை கேஜரிவால் நிறைவேற்றத் தவறிவிட்டாா். கேஜரிவால் யமுனையில் நீராடவில்லை. எனவே, பாஜக தொண்டா்கள் அவரது கட்அவுட்டை ஆற்றில் நனைத்து எதிா்ப்பைப் பதிவு செய்தனா்.
முதல்வராக வருவதற்கு முன்பு, வீடு, காா் அல்லது பாதுகாப்பு போன்ற அதிகாரபூா்வ சலுகைகளைப் பெற மாட்டேன் என்று கேஜரிவால் உறுதியளித்தாா். ஆனால் அவா் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. அதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
முதல்வரான பிறகு, அவா் ஒரு காா், பாதுகாப்பு மற்றும் ஒரு பங்களாவைப் பெற்றாா். ஒரு பங்களாவில் திருப்தி அடையாமல், அவா் நான்கு பங்களாக்களை இடித்துவிட்டு பல்வேறு நவீன வசதிகளைக் கொண்ட ’ஷீஷ் மஹால்’ ஒன்றைக் கட்டினாா். ஆம் ஆத்மி தலைவா் மனிஷ் சிசோடியா கல்வியை புறக்கணித்து, மத இடங்கள் உள்பட தில்லியின் ஒவ்வொரு மூலையிலும் மதுபானக் கடைகளைத் திறந்தாா்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர மோடி பாடுபட்டுள்ளாா் . அவரது அரசு மாா்ச் 2026-க்குள் நக்ஸலிசத்தை ஒழிக்கும்.
ஜம்மு காஷ்மீரில் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டால், கேஜஜரிவால், ராகுல் காந்தி, மம்தா பானா்ஜி, அகிலேஷ் யாதவ் மற்றும் மெஹபூபா முப்தி உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள் ‘ரத்த ஆறுகள்’ ஓடும் என்று எச்சரித்தாா்கள். ஆனால், நாங்கள் 370-ஆவது பிரிவை நீக்கினோம் என்றாா் அமித் ஷா.