மகா கும்பமேளாவில் இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!
`சீனா, OBC, வேலைவாய்ப்பின்மை, தேர்தல் ஆணையர் நியமன விதி, புத்தர்' - மக்களவையில் ராகுல் பேசியதென்ன?
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட் தொடர்பாக பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சிறப்பான பட்ஜெட் என்றும், காங்கிரஸ் உள்ளிட்ட பீகாருக்கு அள்ளிக்கொடுத்ததைத் தவிர வேறெதுவும் புதிதாக பட்ஜெட்டில் இல்லை என்றும் மாறி மாறி கூறிவருகின்றனர். இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.
வேலைவாய்ப்பில் UPA, NDA இரு அரசும் எதுவும் செய்யவில்லை!
தன்னுடைய உரையில் ராகுல் காந்தி, ``வேகமாக வளர்ந்தாலும் சரி, மெதுவாக வளர்ந்தாலும் சரி நாம் வளர்ந்துகொண்டு இருக்கிறோம். ஆனால், உலகளாவிய பிரச்சனையான வேலைவாய்ப்பின்மையை நம்மால் சமாளிக்க முடியவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசும் சரி, இன்றைய தேசிய முற்போக்கு கூட்டணி (NDA) அரசும் சரி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பில் தெளிவாக முடிவைத் தரவில்லை. மேக் இன் இந்தியா திட்டத்தைப் பிரதமர் கொண்டுவந்தார். இருப்பினும், 2014-ல் 15.3 சதவிகிதம் இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), இன்று 12.6 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது. பிரதமர் முயற்சித்தார், ஆனால் தோல்வியடைந்தார்."
சீனாவுக்கு நாம் வரி காட்டுகிறோம்!
``எந்தவொரு நாடும் அடிப்படையில் இரண்டு விஷயங்களை ஒழுங்கமைக்கிறது. ஒன்று நுகர்வு மற்றொன்று உற்பத்தி. ஆனால், ஒரு நாடாக உற்பத்தியை ஒழுங்கமைப்பதில் நாம் தோல்வியடைந்துவிட்டோம். உற்பத்தியை ஒழுங்கமைக்க முயற்சிக்கும் சிறந்த நிறுவனங்கள் நம்மிடம் இருக்கின்றன. ஆனால், உற்பத்தியை நாம் சீனாவிடம் ஒப்படைத்துவிட்டோம். மொபைல் போன் இந்தியாவில் தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. உண்மையில், இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை. இந்தியாவில் அசெம்பிள் மட்டுமே செய்யப்படுகிறது. மொபைல் போனின் அனைத்து பாகங்களும் சீனாவில் தயாரிக்கப்படுகின்றன. சீனாவுக்கு நாம் வரி செலுத்திக்கொண்டிருக்கிறோம்.
சீனர்கள் நம் நாட்டுக்குள் இருப்பதாக நம் ராணுவ தளபதி கூறியிருக்கிறார். அது உண்மையும் கூட. மேக் இன் இந்தியா திட்டத்தின் தோல்வியே இதற்கு முக்கிய காரணம். இந்தியா உற்பத்தி செய்ய மறுப்பதால் சீனா இங்கிருக்கிறது. இந்த உற்பத்திப் புரட்சியை அவர்களிடம் விடுவது கவலைக்குரிய விஷயம். ஒருவேளை, சீனாவுடன் போரிட்டால் நாம் சீன மின்மோட்டார், பேட்டரிகள் கொண்டுதான் போரிடுவோம், அதை அவர்களிடமிருந்தே வாங்குவோம். அதேசமயம் நம்மிடம் மூலோபாய பங்குதாரராக அமெரிக்கா இருக்கிறது. இந்த உற்பத்திப் புரட்சியை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அமெரிக்காவைப் போல இந்தியாவும் முக்கியமானது. ஏனெனில், நாம் இல்லாமல் அவர்களால் தொழில்துறை அமைப்பை உருவாக்க முடியாது. மேலும், இந்தியாவால் செய்ய முடிவதை அமெரிக்காவால் செய்ய முடியாது. காரணம், அமெரிக்காவின் செலவு அமைப்பு நம்மை விட மிகவும் விலை உயர்ந்தது. எனவே, அமெரிக்கா நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்களையும் நாம் உருவாக்க முடியும்."
மக்கள் 50 சதவிகிதத்துக்கும் குறைவில்லாத ஓ.பி.சி-யினருக்கு, பாஜக அரசில் எந்த அதிகாரமும் இல்லை!
``தெலங்கானாவில் 90 சதவிகிதம் பேர் பட்டியலினத்தவர், பழங்குடியினத்தவர், பிற்படுத்தப்பட்டவர் மற்றும் சிறுபான்மையினரே. நாடு முழுவதும் இதுதான் நிலைமை என்று நினைக்கிறேன். நாட்டில் ஓ.பி.சி மக்கள்தொகை 50 சதவிகிதத்துக்கு ஒரு சதவிகிதம் கூட குறைவில்லை. ஆனால், இந்த நாட்டிலுள்ள மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில், எதுவும் ஓ.பி.சி, பட்டியல் அல்லது பழங்குடியினருக்குச் சொந்தமானவை அல்ல. ஓ.பி.சி, பட்டியல் அல்லது பழங்குடியினர் பா.ஜ.க-வில் இருந்தாலும் அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் எந்தவொரு வளர்ச்சியையும் அரசு கொண்டுவர முடியும்."
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் திடீரென 70 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!
``மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி வெற்றிபெற்ற லோக் சபா தேர்தலுக்கும், சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையில் இமாச்சலப்பிரதேச மக்கள்தொகை மகாராஷ்டிரா வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. லோக் சபா தேர்தல் முடிந்த பிறகு சட்டமன்றத் தேர்தலுக்குள் திடீரென சுமார் 70 லட்சம் புதிய வாக்காளர்கள் வந்திருக்கின்றனர். லோக் சபா மற்றும் சட்டமன்றத் தேர்தல் வாக்காளர்கள் பெயர், முகவரி, வாக்குச்சாவடி மையம் ஆகியவற்றின் தருமாறு இந்த அவையில் தேர்தல் ஆணையத்திடம் நான் கேட்டுக்கொள்கிறேன். பா.ஜ.க வெற்றி பெற்ற தொகுதிகளில் பெரும்பாலும் புதிய வாக்காளர்கள் இருக்கின்றனர். எனவே, புதிய வாக்காளர்களை நாங்கள் கணக்கிடுகிறோம். இருப்பினும், தேர்தல் ஆணையம் இந்தத் தகவலை நிச்சயம் கொடுக்காது என்பதை உறுதியாக நம்புகிறேன்."
தேர்தல் ஆணையர் நியமன கமிட்டியிலிருந்து தலைமை நீதிபதியை (CJI) நீக்கியது ஏன்?
``தேர்தல் ஆணையர் நியமன விதிமுறைகள் மாற்றப்பட்டிருக்கிறது. பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர்தான் தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்வார்கள். ஆனால், அந்தக் கமிட்டியிலிருந்து தலைமை நீதிபதியை நீக்கியது ஏன் என்ற கேள்வியை பிரதமரிடம் முன்வைக்கிறேன். இன்னும் சில நாள்களுக்குப் பிறகு தேர்தல் ஆணையர் நியமன பரிந்துரை கூட்டத்துக்கு சொல்லப்போகிறேன். அங்கு 2 - 1 என பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோருடன் நான் இருப்பேன். இருந்தாலும், மோடியும் அமித் ஷாவும் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை ஆதாரப்படுத்துவதற்காக செல்கிறேன். மக்களைவைத் தேர்தலுக்கு முன்பாக தேர்தல் ஆணையர்கள் மாற்றப்பட்டு 2 புதிய தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டதும், தேர்தல் தேதி மாற்றப்பட்டதும் நாம் அறிவோம்."
புத்தரையும், அம்பேத்கரையும் பேசிக்கொண்டே அவர்கள் கூறியதாகி அழிக்கிறீர்கள்!
``நீங்கள் நாள்தோறும் சர்தார் வல்லபாய் படேல் பற்றிப் பேசுகிறீர்கள். ஆனால், அவரின் நன்மதிப்பை அழிக்கிறீர்கள். அம்பேத்கர் பற்றிப் பேசிக்கொண்டே நாள்தோறும் அவரின் மதிப்புகளைச் சிதைக்கிறீர்கள். புத்தர் முன் தலைவணங்குகிறீர்கள். ஆனால், அவர் கூறியதை அழிக்கிறீர்கள். நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதில் உண்மையாக இருக்க வேண்டும். மேலும், நாட்டின் முன்னேற்றத்துக்கான பாதையை நீங்கள் அமைக்கும்போது, அதன் நோக்கத்தில் கவனமாக இருப்பது முக்கியம். வெறுப்போ, வன்முறையோ, கோபமோ வேண்டாம். இவையெல்லாம் நாட்டை அழிகின்றன. இன்று என்னுடைய உரை மிக கண்ணியமாக இருந்தது. இதை அவைக்கு வந்து கேட்டதற்குப் பிரதமருக்கு நன்றி."என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs