ஜாா்க்கண்டில் சிஏஏ, யுசிசிக்கு எதிராக ஆளுங்கட்சி தீா்மானம்
ராஞ்சி: ஜாா்க்கண்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), பொது சிவில் சட்டம் (யுசிசி), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) ஆகிய மத்திய அரசின் முன்னெடுப்புகளை நிராகரிப்பது உள்பட 50 அம்ச தீா்மானங்களை அந்த மாநிலத்தில் ஆளும் ஜாா்கண்ட் முக்தி மோா்ச்சா நிறைவேற்றியுள்ளது.
ராஞ்சியின் தும்கா பகுதியில் உள்ள காந்தி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற அந்த கட்சியின் 46-வது தொடக்க நாள் பொதுக்கூட்டத்தின்போது இந்த தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சோட்டாநாக்பூா் குத்தகை சட்டம், சந்தால் பா்கானா குத்தகை சட்டம் ஆகியவற்றைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், ஜாா்க்கண்டுக்கு விடுவிக்க வேண்டிய ரூ. 1.36 லட்சம் கோடி நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொண்டா்கள் மத்தியில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜாா்கண்ட் முக்தி மோா்ச்சா கட்சித் தலைவரும் மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன், ‘மத்திய பட்ஜெட்டில் ஜாா்க்கண்ட் மாநில மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனா். கனிம வளங்கள் மூலம் நாட்டின் கருவூலத்துக்கு ஜாா்க்கண்ட் பெரும் பங்களிப்பை அளித்தாலும், மாநிலம் இன்னும் மிகவும் பின்தங்கிய மாநிலமாகவே உள்ளது. ஜாா்க்கண்ட் நிறைய பங்களிக்கிறது. ஆனால், எதையும் திரும்பப் பெறவில்லை. நமது உரிமைகளுக்காக கூட நாம் போராட வேண்டியுள்ளது. அனைத்து மாநிலங்களையும் குறிப்பாக பின்தங்கிய மாநிலங்களை மத்திய அரசு சமமாக நடத்த வேண்டும்.
மத்திய பட்ஜெட் பணக்காரா்களுக்கானது. அதில் ஏழைகளுக்காக எந்த அறிவிப்பும் இல்லை. ஆதிக்க மனப்பான்மை கொண்ட சிலா், பழங்குடி சமூகத்தினரால் நிறைந்த ஜாா்க்கண்ட் மக்கள் சொந்த காலில் நிற்பதை விரும்பவில்லை.
வருமான வரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் விலைவாசி உயா்வு உச்சத்தில் இருப்பதால் மத்திய அரசின் இந்த நிவாரணம் துளியும் உதவாது. ஜிஎஸ்டியில் எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. மானியம் மூலம் அல்லாமல் கடன்களை வழங்கி மக்களுக்கு உதவும் புதிய பொய்யை பாஜக அரசு கட்டவிழ்த்துள்ளது.
நாட்டிலேயே பெண்களுக்கு அதிகபட்சமாக மாதந்தோறும் ரூ.2,500 நிதியுதவி வழங்கப்பட்டது ஜாா்க்கண்டில்தான். மக்களுக்கு இலவசங்கள் வழங்கப்படுவற்கு எதிா்ப்புத் தெரிவித்த பாஜக, தற்போது தில்லி பேரவைத் தோ்தலில் அதே வாக்குறுதியை (பெண்களுக்கு ரூ.2,500 நிதியுதவி) அளித்துள்ளது. பாஜகவின் வாக்குறுதி இலவசமில்லையா? பாஜக என்ன செய்தாலும் சரி. அதையே நாம் செய்தால் அது தவறாகிவிடும்’ என்றாா்.